முதலீடு சில ஆயிரம்.. ஆனா வருமானம் கோடி.! சதுரங்க வேட்டை கும்பலின் இரிடியம் மோசடி !

By Raghupati RFirst Published Apr 11, 2022, 10:07 AM IST
Highlights

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஷாகீர் (வயது 29). இவர் சென்னையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அறிமுகமானார். 

இதனை தொடர்ந்து ராஜன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி புலவன் குப்பத்தை சேர்ந்த உலகநாதன் (44), நெய்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (52) ஆகியோரை ஷாகீருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, இவர்களிடம் இரிடியம் இருப்பதாகவும், இதை குறைந்த விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஷாகீரிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பிய ஷாகீர் தனது உறவினர் சீனிவாசனிடமும் இதுபற்றி கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ரூ. 3 லட்சத்திற்கு இரிடியத்தை விலை பேசினர். இதில் முதல் தவணையாக ரூ. 1½ லட்சத்தை ராஜன் மூலமாக உலகநாதனிடம் கொடுத்தனர். மேலும் ஆன்லைன் மூலமாக ஒரு வங்கி கணக்கிற்கு ரூ. 14 ஆயிரமும் அனுப்பி வைத்தனர். பின்னர், புலவன்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து இரிடியத்தை பெற்றுக் கொள்ளும்படி உலகநாதன், ஷாகீருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்படி நேற்று முன்தினம் ஷாகீர், அவரது உறவினர் சீனிவாசனுடன் ஒரு காரில் புலவன் குப்பத்தில் உள்ள உலகநாதன் வீட்டிற்கு வந்தார். அங்கு பாலசுப்பிரமணியனும் இருந்தார். அப்போது அவர்கள் பார்சல் போன்ற ஒரு பொருளை காண்பித்து, இதில் இரிடியம் உள்ளது. மீதி பணத்தை கொடுத்துவிட்டு பெற்று செல்லுமாறு கூறினர். இதற்கு ஷாகீர், நாங்கள் பணம் கொண்டு வரவில்லை. நீங்கள் இரிடியத்தை கொடுங்கள் நாங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார். 

இல்லையென்றால் ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த உலகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஷாகீர், சீனிவாசனை ஆபாசமாக திட்டி, தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து அவர்கள் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். 

அதில், ஒரு அலுமினிய உருளையை பார்சலில் வைத்து, இரிடியம் என்று ஏமாற்றி கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட உலகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் பாலசுப்பிரமணியன் நெய்வேலியில் உள்ள என். எல். சி. யில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த தாம்பரத்தை சேர்ந்த ராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

click me!