த்ரில்லர் படம் போல விறுவிறு விசாரணை... சுவிஸ் பெண்ணைக் கொன்ற குற்றவாளி சிக்கியது எப்படி?

By SG Balan  |  First Published Oct 22, 2023, 1:17 PM IST

டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் 12 மணிநேர விசாரணையில் துரிதமாகக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.


அண்மையில், டெல்லியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த போலீசார் 12 மணிநேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

பலமுறை கைமாறிய வெள்ளை நிற சான்ட்ரோ கார், பெண் பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆதார் அட்டை மற்றும் தவறான தொலைபேசி எண் ஆகியவை தான் முதலில் போலீசார் வசம் இருந்த தடயங்கள். இவற்றை வைத்துதான் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.

Latest Videos

undefined

சுவிஸ் பெண்ணின் சடலம் வீசப்பட்டிருந்த திலக் நகர் பிளாக் 18 பகுதியில் இருந்து பெற்ற சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்படும் குர்பிரீத் சிங்கின் கார் தென்பட்டது. அவர் தனது காரை சுவருக்கு அருகில் நிறுத்திவிட்டு உடலை வெளியே தள்ளுவதை வீடியோவில் காண முடிந்தது.

காட்சிகளில், சிங் ஒரு சிறிய காபூலி தலைப்பாகை அணிந்திருந்தார். காரின் எண்ணும் வீடியோவில் தெரிந்தது. ஆனால் அது பலமுறை கைமாறிய கார் என்பதால் அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க காவலர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.

சிங் சான்ட்ரோவை வாங்கிய கார் டீலரை ஒரு போலீஸ் குழு கண்டுபிடித்தது. காரின் விலை ரூ.1.8 லட்சம். அதில் ரூ.1.65 லட்சத்தை ரொக்கமாகக் கொடுத்து, அக்டோபர் 8 ஆம் தேதி ஒரு நபர் தன்னிடம் காரை வாங்கினார் என்று கார் டீலர் போலீசாரிடம் கூறினார். டீலருக்கு சிங் கொடுத்த மொபைல் எண் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை. அடையாளச் சான்றாகச் சமர்ப்பித்த ஆதார் அட்டையும் ஒரு பெண்ணுடையது.

இந்நிலையில் டீலர் காரை பதிவு செய்வதற்காக சிங்கை தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த மொபைல் எண் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. பின்னர் போலீசார் தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரின் இரண்டாவது எண்ணைக் கண்டுபிடித்தனர். அந்த எண் சிங்கின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முகவரி திலக் நகர் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், மற்றொரு போலீஸ் குழு, பெண் ஒருவரைக் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தனர். பாலியல் தொழில் செய்துவருபவராகக் கூறுபடும் அவரது ஆதார் அட்டையைத்தான் குர்பிரீத் சிங் பயன்படுத்தியுள்ளார். அந்தப் பெண் செப்டம்பர் 3ஆம் தேதி மசாஜ் செய்வதற்காக சிங்கைச் சென்று சந்தித்ததாகவும் அப்போது தனது ஆதார் அட்டையை வாங்கிக்கொண்டு அதை வைத்து கார் வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப பிரிவினர் தொடர்ந்து முயற்சி செய்ததில் குர்பிரீத் சிங்கின் தந்தை, தாய் மற்றும் சகோதரரின் தொலைபேசி எண்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் ஜனக்புரியில் இருப்பது தெரிந்தாலும் குறிப்பிட்ட முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் முகவரியையும் கண்டுபிடித்த போலீசார் குற்றவாளியை கைது செய்துவிட்டனர். இவ்வளவு விசாரணையும் 12 மணிநேரத்திற்குள் நடத்தப்பட்டு குற்றவாளி கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!