லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்
லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வேக வைத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் அமைந்துள்ள வீட்டில் மனோஜ் சாஹ்னி (56) என்பவரும், சரஸ்வதி வைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த வீட்டில் இருந்து அழுகிய நிலையில், துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட சரஸ்வதி வைத்யாவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளதாக, மும்பை துணை காவல் ஆணையர் ஜெயந்த் பஜ்பலே தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் உடல் மர அறுவை இயந்திரம் கொண்டு இரண்டாக துண்டிக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் சிறிது சிறிதாக வெட்டப்பட்டு அவை குக்கரில் வேக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மனோஜ் சனேவை கைது செய்துள்ள போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையின் பின்னணி, வேறு யாருக்காவது இதில் தொடர்பிருக்கிறதா, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சரஸ்வதி வைத்யா தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் சாஹ்னி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண்ணை அவருடன் இணைந்து வாழ்ந்த அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மும்பையில் அதேபோன்று நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.