ஒரு கையில் கோடாரி மறு கையில் தாய்மாமன் தலையுடன் வலம் வந்த நபர்... கரிமட்டியில் பரபரப்பு...!

By Kevin KaarkiFirst Published May 14, 2022, 12:42 PM IST
Highlights

காவல் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வரும் முன், லால் பகுதுர் கௌட் சுமார் இரண்டு கிலோமீட்டர்கள் தூரம் நடந்து சென்று இருக்கிறார். 

மத்திய பிரதேச மாநிலம் சித்தி பகுதியை சேர்ந்த நபர் தனது தாய்மாமன் தலையை வெட்டி, கையில் எடுத்துக் கொண்டு சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள கிராமம் கரிமட்டி. மாவட்ட தலைமையகத்தில் இருந்து இந்த கிராமம் சுமார் பத்து கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த லால் பகதுர் கௌட் தனது தாய்மாமன் தனக்கு செய்வினை வைத்து தன்னை அழிக்க முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டி வந்துள்ளார்.  

வாக்குவாதம்:

இந்த நிலையில் தான்,சம்பவம் நடைபெற்ற நாளில் 26 வயதான லால் பகதுர் கௌட் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்றார். அங்கு லால் பகதுர் கௌட் மற்றும் அவரின் தாய்மாமன் மக்சுடன் சிங் கௌட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையான சொற்களால் வசை பாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கோபம் அடைந்த லால் பகதுர் கௌட் கையில் இருந்து கோடாரியை எடுத்து தாய்மாமன் மக்சுடன் சிங் கௌட் கழுத்தில் வெட்டினார்.

 லால் பகதுர் கௌட் கடும் கோபத்தில் கோடாரி கொண்டு வெட்டியதில் தாய்மாமன் மக்சுடன் சிங் கௌட் தலை அவரது உடலை விட்டு நீங்கி கீழே விழுந்து விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மக்சுடன் சிங் கௌட் உயிரிழந்தார். பின் அவரின் தலையை ஒரு கையிலும் மற்றொரு கையில் கோடாரியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய லால் பகதுர் கௌட் அந்த கிராமத்தின் வீதிகளில் சாதாரணமாக நடந்து சென்றார்.

விசாரணை:

வழியில் வருவோர் இதனை பார்த்து அதிர்ந்து போயினர். பொது வீதியில் நபர் ஒருவர் ஒரு கையில் மனித தலை மற்றொரு கையில் கோடாரியுடன் நடந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வரும் முன், லால் பகுதுர் கௌட் சுமார் இரண்டு கிலோமீட்டர்கள் தூரம் நடந்து சென்று இருக்கிறார். 

பின் காவல் துறையினர் லால் பகதுர் கௌட்-ஐ நடுவழியில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக லால் பகதுர் கௌட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என சம்பவ இடம் அமைந்துள்ள ஜமோடி காவல் நிலைய அதிகாரி சேஷ்மானி மிஸ்ரா தெரிவித்து இருக்கிறார். 

click me!