பெற்ற தாயே மகனை கூலிப்படை ஏவி கொன்ற பயங்கரம்.. அதிமுக முன்னாள் MLA தம்பி உட்பட 6 பேர் கைது.!

By vinoth kumarFirst Published Jan 12, 2022, 10:39 AM IST
Highlights

அம்சவல்லிக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.37 லட்சத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது. அந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு மீண்டும், மீண்டும் பணம் கேட்டு தாய் அம்சவல்லியிடம் தொந்தரவு செய்தது வந்துள்ளார். 

திருச்சியில் லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி என்பவரின் தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது  செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் அருகே, கன்னியாகுடியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). சொந்தமாக லாரி வைத்துள்ளார். காந்திநகரில் வசித்த இவருக்கு, லோகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டரை வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், தினமும் குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளத. இதனால், மனைவி லோகேஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில், வடக்கு ஈச்சம்பட்டி ஏரியில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமார் உயிரிழந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜா (34), சுரேஷ் என்கிற பாண்டி(29), புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) (இவர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் தம்பி ஆவார்), ஷேக் அப்துல்லா (45) மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாயே மகனை கொல்ல கூலிப்படையை ஏவியது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, சதீஷ்குமார் தாய் அம்சவல்லியையும்(63) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அம்சவல்லிக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.37 லட்சத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது. அந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு மீண்டும், மீண்டும் பணம் கேட்டு தாய் அம்சவல்லியிடம் தொந்தரவு செய்தது வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்சவல்லி பெற்ற மகன் என்றும் பாராமல் கூலிப்படையை செய்துள்ளார். இதனையடுத்து, கைதான 6 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

click me!