
நெல்லூர் மாவட்டம் தடிபார்த்தில் பெண் மென்பொறியாளரை அவரது காதலன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதோடு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூர் மாவட்டம் பொடலகுரு மண்டலத்தில் உள்ள தடிபர்த்தியை சேர்ந்தவர்கள் மாலபதி சுரேஷ் ரெட்டி மற்றும் பொலகுரு காவ்யா. இவர்கள் இருவரும் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தனர். அவர்கள் இருவரும் சென்னையில் சில காலங்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரவர் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தனர்.
இதனிடையே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் குறித்து காவ்யாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதல் ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க காவ்யாவின் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவ்யாவை சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து காவ்யாவை அவர்களது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் காவ்யா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சுரேஷ் ரெட்டியும் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷ் ரெட்டிக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது? உள்ளிட்டவை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.