பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொழிலதிபரிடம் 1.75 கோடி ரூபாய் மோசடி செய்து காவல்துறையில் மாட்டிக்கொண்டார்.
பெங்களூருவின் சந்திரா லேஅவுட் பகுதியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஆர். ஸ்ரீனிவாஸ். டிப்ளமோ படித்த இவர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ஒரு தொழிலதிபரிடம் ரூ.1.75 கோடி மோசடி செய்ததாக தலகட்டபுரா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட வெங்கட்நாராயண் என்பவர் பழைய கார்கள் விற்பனை செய்யும் தொழிலைச் செய்துவருகிறார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் ஸ்ரீனிவாஸுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் முதலில் சந்தித்துள்ளனர். அப்போது ஸ்ரீனிவாஸ் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் பெங்களூரு தெற்கு பிரிவில் ஏஎஸ்பியாக பணிபுரிவதாகவும் சொல்லி இருக்கிறார்.
மைசூருவில் சொத்து தொடர்பான ஒரு வழக்கை தான் நடத்தி வருவதாகவும் அந்த வழக்கில் சாதகமான முடிவு கிடைத்தால் தனக்கு 250 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கூறிய ஶ்ரீனிவாஸ், அந்த வழக்கு சம்பந்தமான செலவுக்கு ரூ.2.5 கோடி தேவைப்படுவதாக வெங்கட்நாராயணிடம் கூறியுள்ளார். ஶ்ரீனிவாஸ் கூறியதை நம்பிய வெங்கட்நாராயண் ரூ.49 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஶ்ரீனிவாஸ் அந்தப் பணத்தை டிசம்பரில் முழுமையாக திருப்பிக் கொடுத்துவிட்டார்.
வெங்கட்நாராயணின் நம்பிக்கையைப் பெறுவதற்காகத்தான், முதல் முறை வாங்கிய பணத்தை ஸ்ரீனிவாஸ் திருப்பிக் கொடுத்திருக்கிறார். ஆனால், பின்னால் மறுபடியும் பணம் கேட்டிருக்கிறார். வெங்கட்நாராயணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தன் காதலி ரம்யாவின் வீட்டில் நடைபெற்ற ஒரு பூஜைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.
காசி விஸ்வநாதருக்கு தலைப்பாகை தயாரிக்கும் இஸ்லாமியர்! 250 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்!
இதற்குப் பின் ஒருநாள் ரூ.1.20 கோடியை ஒரு ஓட்டல் அதிபரிடமிருந்தும், ரூ.56 லட்சத்தை தனது நண்பர்களிடம் இருந்தும் வாங்கி ஶ்ரீனிவாஸிடம் கொடுத்துவிட்டார். அந்தப் பணத்தை வாங்கிய பிறகு ஸ்ரீனிவாஸ் தனது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். ஶ்ரீனிவாஸின் காதலி ரம்யாவையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது போனும் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெங்கட்நாராயண், போலீசாரை அணுகினார். அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 2010ஆம் ஆண்டு ஒரு கார் திருட்டுபோனது தொடர்பான வழக்கில் ஶ்ரீனிவாஸுக்கு தொடர்பு இருப்பதாக துப்பு கிடைத்ததை வைத்து போலீசார் ஶ்ரீனிவாஸை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்படும் ஶ்ரீனிவாஸ் திரைப்படங்களில் காவல்துறை அதிகாரிகளின் கதாபாத்திரங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டு அவர்களைப் போல வேடம் அணிந்து மோசடி செய்ய தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக அவர் போலீஸ் சீருடை, ஐபிஎஸ் அதிகாரி என்று காட்டிக்கொள்ள போலி அடையாள அட்டை போன்றவற்றைத் தயாரித்துள்ளார். தன்னை மூத்த அதிகாரி என்று கூறிக்கொண்டு, போலீஸ் ஊழியர்களுடன் உரையாடி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் நம்பகமாகத் தோன்றும் சான்றுகளையும் காட்டியதால் யாரும் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை கூறுகிறது.
ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தும் ஆசையில் ஐபிஎஸ் அதிகாரி என்ற தோரணையை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்துள்ளார். சொகுசு பைக்குகளை வாங்கியுடன் தன் காதலி ரம்யாவுக்காகவும் தாராளமாக செலவு செய்துள்ளார். தொழிலதிபரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட ஶ்ரீனிவாஸ் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டார்.
ரூ. 252 கோடிக்கு வீடு! இந்தியாவின் காஸ்ட்லீ வீட்டை வசப்படுத்திய நீரஜ் பஜாஜ்