டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

By Manikandan S R SFirst Published Feb 17, 2020, 11:08 AM IST
Highlights

திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த மாதம் குமரவேல் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவர் சமீபத்தில் தான் வெளியே வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இருவரிடையேயும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த குமரவேல் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கிறது காடாம்புலியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் குமரவேல்(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குமரவேல் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. ராஜேஸ்வரி டிக் டாக் செயலியில் அதிகமாக காணொளி வெளியிட்டு வந்ததால் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த குமரவேல் அவருடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த மாதம் குமரவேல் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவர் சமீபத்தில் தான் வெளியே வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இருவரிடையேயும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த குமரவேல் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

மேலும் ஆட்டுக்கல்லை தூக்கி ராஜேஸ்வரியின் தலையில் போட்டதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். பின் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் வீட்டு கதவை உடைத்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜேஸ்வரியின் தாய் அளித்த புகாரின் படி தலைமறைவாக இருந்த குமரவேலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகாலையில் கோர விபத்து..! பழுதாகி நின்ற கார் மீது படுவேகத்தில் மோதிய சொகுசு பேருந்து..! 3 பேர் பலி..!

click me!