கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கொடூர கணவன்..! மதுரை இளம்பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்..!

By Manikandan S R SFirst Published Jan 11, 2020, 3:29 PM IST
Highlights

ஆத்திரத்தில் இருந்த குமரகுரு தாய்,மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். முதல்முறையாக வெளியூர் சென்ற போது லாவண்யாவை கூலி படையினர் கொல்ல முயன்றுள்ளனர். அப்போது தலையில் வெட்டு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சீனியம்மாள். மாரியப்பன் மதுரையில் பாத்திரக்கடை வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குமரகுரு என்கிற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மாரியப்பன் இறந்து விட்டார். அதன்பிறகு பாத்திரக்கடையை சீனியம்மாளும் குமரகுருவும் கவனித்து வந்துள்ளனர்.

குமரகுருவிற்கு லாவண்யா என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்து தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று நாட்களுக்கு முன் இரவு வீட்டில் அனைவரும் உணவு அருந்தி விட்டு உறங்கச் சென்றனர். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டின் உள்ளறையில் தூங்கிக் கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த சீனியம்மாளையும் மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

அக்கம்பக்கத்தினர் சீனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பலியான லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அவரது இறுதிச்சடங்குகளுக்கு பிறகு குமரகுருவிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாலையில் மர்ம நபர்கள் சுலபமாக வீட்டிற்குள் நுழையும் படி வாசல் கதவு பூட்டாமல் இருந்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களும் செயல்படவில்லை. இதனால் குமரகுரு மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது.

அவரிடம் காவலர்கள் கிடுக்குபிடி கேள்விகள் மூலம் நடத்திய விசாரணையில் மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த அதிர்ச்சி தகவலை அவர் கூறியிருக்கிறார். தந்தை இறந்த பிறகு பாதி சொத்துக்களை தன் பெயருக்கும் மீதியை மனைவி பெயருக்கும் குமரகுரு மாற்றி உள்ளார். அதன்பிறகு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொத்துக்களை விற்க தொடங்கியிருக்கிறார். மனைவியிடம் இருந்த சொத்துக்களை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்துள்ளார். லாவண்யாவிற்கு ஆதரவாக சீனியம்மாளும் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த குமரகுரு தாய்,மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். முதல்முறையாக வெளியூர் சென்ற போது லாவண்யாவை கூலி படையினர் கொல்ல முயன்றுள்ளனர். அப்போது தலையில் வெட்டு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். அதன்பிறகு தான் இரண்டாம் முறையாக வீட்டில் வைத்தே கொலை செய்ய தனது கடையில் இருக்கும் அலேக்ஸ் மூலமாக கூலிப்படையை ஏவி இருக்கிறார்.

அவர்களுக்கு கூலியாக 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். திட்டத்தின் படி அதிகாலையில் அவர்களை வீட்டுக்கு வரவைத்து மனைவியை கொலை செய்துள்ளார் குமரகுரு. வெட்டு காயங்களுடன் சீனியம்மாள் உயிர் தப்பினார். இந்த நிலையில் தான் முன்னுக்கு பின்னாக பதிலளித்த குமரகுரு மீது சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி இருக்கிறார். மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 

click me!