திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை கழுத்தை நெரித்தும், கல்லை தலையில் போட்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர். வீரன் கூலி வேலை செய்து வந்தார். மேலும் கடந்த சில வருடங்களாக சிறுமலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவ்வபோது பாரதிபுரத்துக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி இன்று பாரதிபுரம் வந்த வீரன் அங்குள்ள ஒரு சுகாதார வளாகம் அருகில் பாரதிபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த வீரனின் நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து அருகில் இருந்த ஒரு கயிற்றை எடுத்து அவரது கழுத்தை நெரித்துள்ளனர்.
மேலும் அருகில் இருந்த பாறாங்கல்லையும் எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட வீரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மினி லாரி மீது மோதி புல்லட்டுடன் தூக்கி வீசப்பட்ட வாலிபர்: பரபரப்பு சிசிடிவி காட்சி
இந்த நிலையில் வீரனுடன் மது அருந்திய அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.