உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கு பூட்டப்பட்டு தனிப்பட்டதாக உள்ளது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடரவிடாமல் பிளாக் செய்துள்ளார். இது அவரது சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தான் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் நண்பர்கள் தமது வீட்டு வருவதாகவும் அவரது கணவர் சந்தேகப்பட்டுள்ளார். இது அவர்களது உறவில் விரிசலை ஏற்படுத்தி, அவ்வப்போது சண்டைக்கு வழிவகுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சுற்றுலா மற்றும் பயண நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மனைவி இல்லத்தரசி. லக்னோவின் பாரா பகுதியில் வசித்து வரும், அந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
பீகாரில் நர்ஸ் கூட்டு பலாத்காரம்... கொலை செய்து ஆம்புலன்சில் மறைத்து வைத்த மருத்துவர்
சம்பவத்தன்று காலை ரேபரேலிக்கு காரில் பயணம் மேற்கொண்ட அவர்கள், திடீரென பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்குத் திரும்பியுள்ளனர். அதிகாலை 5 மணியளவில், சுல்தான்பூரில் உள்ள முஜேஷ் சந்திப்புக்கு அருகில் காரை நிறுத்திய குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர், தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் ஆத்திரமடைந்த அவர் தனது குழந்தைகள் கண் முன்னே தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். இந்த காட்சியை பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுதுள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் சென்ற கார் அங்கேயே நின்றுள்ளது. அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இதுகுறித்து சந்தேகமடைந்து அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம், தங்களது தாயை தந்தை கொலை செய்து விட்டதாக அவர்களது 12 வயது மகள் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.