மருத்துவர் மற்றும் பிற ஊழியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் திருமணமாகி கணவரை இழந்தவர். அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் செவிலியராக பணிபுரிந்த தனியார் நர்சிங் ஹோமில் பெண் மருத்துவர் மற்றும் கம்பவுண்டர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மோதிஹாரியில் உள்ள ஜான்கி சேவா சதன் நர்சிங் ஹோமில் பணிபுரிந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மற்றும் பிற ஊழியர்கள் தலைமறைவாக உள்ளனர். அதே நேரத்தில் போலீசார் ஒரு கம்பவுண்டரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் டாக்டர் ஜெய்பிரகாஷ் தாஸ் மற்றும் 5 பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் வழக்குப் பதிவு செய்து வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நர்சிங் ஹோமுக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
பலியான 30 வயதான பெண் திருமணமாகி கணவரை இழந்தவர். அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது. அந்தப் பெண் பணிபுரிந்த நர்சிங் ஹோமை டாக்டர் ஜெய்பிரகாஷ் தாஸும் மந்தோஷ் குமாரும் சேர்ந்து நிர்வகித்து வந்தனர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சொல்கிறார்.
அதிகாலையில் திருவனந்தபுரம் ஏசியாநெட் அலுவலகத்தில் புகுந்து சூறையாடிய நபர் கைது
“கணவரின் மறைவுக்குப் பிறகு, என் மகள் என்னுடன் தங்கினாள். எங்கள் நிலையைப் பார்த்து, ஜெய்பிரகாஷும், மந்தோஷ் குமாரும் என் மகளை தங்கள் நர்சிங் ஹோமுக்கு அனுப்பி வைக்குமாறு சொன்னார்கள். அங்கு வேலை பார்த்து அவள் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம், புதிய திறன்களையும் வளர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்” என தாயார் கூறுகிறார்.
மேலும், “அப்போது வேலை தேடிக்கொண்டிருந்த என் மகளும் அதற்குச் சம்மதித்து அங்கு வேலைக்குச் சென்றாள். திரும்பி வந்ததும் அவள் மீண்டும் அங்கு செல்ல மறுத்துவிட்டாள். ஏன் என்று விசாரித்தபோது, மருத்துவர் மற்றும் மற்றவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் சொன்னாள். அதன்பின் அவள் அங்கு செல்லவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, ஜெய்பிரகாஷும் மந்தோஷ் குமாரும் என் வீட்டிற்கு வந்து மன்னிப்புக் கேட்டு, நல்ல ஊதியம் தந்து பார்த்துக்கொள்கிறோம் என்று உறுதியளித்து, வேலைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நர்சிங் ஹோமுக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை" என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.
“பின்னர், ஜெய்பிரகாஷ் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவர் முசாபர்பூரில் இருப்பதாகவும் எங்களுக்குத் தெரிவித்தார். இருப்பினும், அவர் குறிப்பிட்ட மருத்துவமனையில் நாங்கள் அவளைக் காணவில்லை. தீவிர தேடுதலுக்குப் பிறகு, ஆம்புலன்சில் என் மகளின் உடலைக் கண்டோம்" என்றும் பெண்ணின் தாயார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
“குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மற்ற நபர்களை தேடும் பணி நடந்து வருகிறது. எங்கள் குழு தீவிரமாக செயல்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என மோதிஹாரி எஸ்பி உறுதி கூறியுள்ளார்.