சென்னையில் 3 வயது குழந்தையை கடத்தி ரூ.60 லட்சம் கேட்டு நாடகமாடிய பணிப்பெண் ! காதலனுடன் அதிரடியாக கைது.!!

By Selvanayagam PFirst Published Jul 19, 2019, 10:18 AM IST
Highlights

சென்னை அமைந்தகரையில் பெண் டாக்டரிடன் 3½ வயது மகளை கடத்திச்சென்று ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய வேலைக்காரப் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

சென்னை அமைந்தகரை, செனாய் நகர், செல்லம்மாள் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி. டாக்டரான இவர், தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 3½ வயதில் அன்விகா என்ற மகள் இருக்கிறாள். அவள், முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். இவர்களது வீட்டில் திருச்சியை சேர்ந்த அம்பிகா என்ற பெண், வீட்டு வேலைகள் செய்து வந்தார்.

நேற்று பிற்பகலில்  அன்விகாவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துவந்த நந்தினி, மகளை வேலைக்கார பெண் அம்பிகாவிடம் விட்டு விட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது அம்பிகா மற்றும் தனது மகள் அன்விகா இருவரையும் காணவில்லை.

வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் காணாததால் அருகில் உள்ள கடைக்கு சென்று இருப்பார்கள் என நினைத்து வெளியே வந்து தேடிப்பார்த்தார். அங்கும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, மகள் மற்றும் வேலைக்கார பெண் இருவரையும் அக்கம் பக்கத்தில் தேடி வந்தார்.

சில மணி நேரத்தில் வேலைக்கார பெண் அம்பிகா, டாக்டர் நந்தினியின் செல்போனில் தொடர்பு கொண்டு, “என்னையும், அன்விகாவையும் யாரோ கடத்திச்சென்று விட்டார்கள். நாங்கள் எங்கு இருக்கிறோம் என தெரியவில்லை. எங்களை காப்பாற்றுங்கள்” என கூறினார், அதற்குள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் பதற்றமடைந்த நந்தினி, இதுபற்றி தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். அருள்ராஜ் உடனடியாக வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து அதே செல்போனில் இருந்து பேசிய மற்றொரு நபர், “உங்கள் மகள், வேலைக்கார பெண் இருவரையும் உயிரோடு விடவேண்டும் என்றால் ரூ.60 லட்சம் தரவேண்டும்” என மிரட்டல் விடுத்துவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் மகள் மற்றும் வேலைக்கார பெண் கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். அதன்பேரில் அமைந்தகரை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் வேலைக்கார பெண் அம்பிகாவின் செல்போன் சிக்னலையும் கண்காணித்து வந்தனர். அம்பிகா, டாக்டர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆகிறது.


வீட்டில் இருந்து மகள் மற்றும் வேலைக்கார பெண் எந்தவித சத்தமும் இல்லாமல் கடத்தப்பட்டதால், இதில் வேலைக்கார பெண் அம்பிகாவுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட டாக்டரின் மகள், வேலைக்கார பெண் ஆகியோரையும், கடத்தல்காரர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கோவளத்தில் அன்விகா மீட்கப்பட்டார். அவரை கடத்தியதாக அம்பிகா மற்றும் முகமது கலிபுல்லா சேட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் முகமது கலிபுல்லா சேம் அம்பிகாவின் காதலன் என்பது விசாரணையில் தெரியவந்தது.   

click me!