கணவனை விட்டுவிட்டு டிக் டாக் தோழியுடன் ஓடினாரா? வினிதாவின் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 25, 2019, 11:53 AM IST
Highlights

உண்மையை தெரியாமல் கணவனை விட்டு விட்டு டிக் டாக் தோழியுடன் 50 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு இளம்பெண் ஓட்டமெடுத்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த வினிதா  என்ற பெண்ணுக்கும், காளையார்கோவில் அருகே உள்ள சானா ஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவன்-மனைவி இருவரும் காளையார்கோவிலில் வசித்து வந்தனர்.

 டிக்-டாக் செயலி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட வினிதாவுக்கு, அதன்மூலம்  திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் ‘டிக்-டாக்’செயலி மூலம் பாடல்களுக்கு ஏற்ப நடித்து, ஒருவருக்கு ஒருவர் அனுப்பியும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.

இது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு, வினிதாவை அவரது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் ஆரோக்கிய லியோ. சமீபத்தில் அங்கிருந்து வினிதா காணாமல் போனார். டிக்-டாக் தோழியுடன் அவர் மாயமானதாகவும், தாய் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதுபற்றி திருவேகம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினிதாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான வினிதா நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆஜரானார். அவரிடம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் விசாரணை நடத்தினர். வினிதா மாயமானது குறித்து திருவேகம்புத்தூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து போலீசார் வந்து வினிதாவை அழைத்து சென்றனர்.

இதுகுறித்து வினிதா கூறுகையில், ’’திருமணத்தின்போது எனக்கு வழங்கிய நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கும் தெரியும். இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18-ம் தேதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை அவர் சந்தேகப்பட்டு அடித்தார். இதனால், எனது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன்.

இந்நிலையில் டி.வி.யில் நான் நகையுடன் டிக்-டாக் தோழியுடன் மாயமானதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்த நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர் போலீசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன். நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ் லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான், நான் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!