கேரளா ஆர். எஸ். எஸ். பிரமுகர் கொலை வழக்கு..... கோவையில் திடீர் திருப்பம்... !

By Raghupati RFirst Published Nov 26, 2021, 8:08 AM IST
Highlights

கேரளாவில் ஆர். எஸ். எஸ். பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக கோவை வந்த காவல் துறையினருக்கு ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளியை சேர்ந்தவர் சஞ்சித். இவர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆவார். இவர் கடந்த 15-ந்தேதி தனது மனைவி ஹர்ஷிதாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ‘மம்முரம்’ என்ற பகுதியில் போய் கொண்டிருந்த போது,  எதிரே காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். பின்னர் காரில் வந்த கும்பல் சஞ்சித்தை கொடூரமாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சஞ்சித், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக பாலக்காடு தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

மேலும், இந்த  வழக்கில் தொடர்புடைய 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் கைதான 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் கேரள போலீஸ் அதிகாரிகள், கோவை வந்தனர்.  பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவில் உள்ள பழைய இரும்பு கடையில் கடந்த 2 நாட்களாக அவர்கள்  சோதனை செய்தனர். மேலும் இரும்பு கடை உரிமையாளர் முருகானந்தத்திடம் விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையின் போது, அவரிடம் இருந்தது கொலைக்கு பயன்படுத்திய கார் என்பது தெரியாது என்று கூறினார்.மேலும் காரை ரூ. 15 ஆயிரம் கொடுத்து வாங்கிய பின், அந்த காரை கடந்த சில நாட்களாக நிறுத்தி வைத்தும் யாரும் வாங்குவதற்கு வரவில்லை. இதையடுத்து அந்த காரை பழைய இரும்புக்கு உடைத்து சில உதிரிபாகங்களை ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் முருகானந்தத்தை அழைத்துக் கொண்டு பெருந்துறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இதற்கிடையில் பொள்ளாச்சியில் உள்ள இரும்பு கடைக்கு தடயவியல் உதவியாளர் அனுஷாத் தலைமையிலான நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்தனர். அவர்கள் கார் என்ஜின் உள்ளிட்ட உதிரிபாகங்களில் பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் உதிரிபாகங்களை போலீசார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையொட்டி வெளியாட்களை கடைக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் காரின் உதிரிபாகங்களை எடுத்துக் கொண்டு கேரள தனிப்படை போலீசார் பெருந்துறைக்கு விரைந்து சென்றனர். 

பொள்ளாச்சியில் உள்ள இரும்பு கடையில் கைப்பற்றப்பட்ட காரின் உதிரிபாகங்கள், பெருந்துறையில் விற்பனை செய்யப்பட்ட காரின் உதிரிபாகங்களுடன் ஒத்துபோகிறதா? என்று ஆய்வு செய்வதற்கு எடுத்து செல்லப்படுகிறது. போலீசில் சிக்காமல் இருப்பதற்கு கொலையாளிகள் பழைய காரை கொலைக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் வண்டி புத்தகம், சேஸ் எண் இருந்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக அவற்றை மீண்டும் வாங்கி சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கேரளா ஆர்.எஸ்.எஸ் நபர் கொலை வழக்கில் கோவையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

 

click me!