பேண்ட்டிற்குள் பட்டா கத்தி, ரவுடிகள் சகஜமாக உலா .. என்ன நடக்கிறது திமுக ஆட்சியில்..!

By Thanalakshmi VFirst Published Nov 25, 2021, 5:15 PM IST
Highlights

எஸ்.ஐ வெட்டிகொலை, போக்குவரத்து ஆய்வாளர் கார் மோதி கொலை என்பதை தொடர்ந்து ஆயுதங்களுடன் சுற்றும் இளைஞர் கும்பல் போன்றவற்றால் தமிழகம் தனது அமைதியை இழக்கிறதா எனும் கேள்வி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
 

சென்னை அருகே தாம்பரத்தில் நேற்று ரோந்து போலீசார் பணியிலிருந்த போது அவ்வழியே சந்தேகப்படும் படியாக வந்த இளைஞர்களை சோதித்த போது, ஒருவரது பேண்ட்டில் மறைந்த வைத்திருந்த ஒன்றரை அடி நீளமுள்ள வெட்டு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

சமீப காலமாக, தமிழக காவல்துறைக்கு பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக உள்ளதாகவும் குற்றவாளிகளும் ரவுடிகளும் ஆயுதங்களுடன் மிக சகஜமாக நடமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் விதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டுமே அதற்கு ஏற்றாற்போல் , எஸ்.ஐ பூமிநாதன் கொலை, போக்குவரத்து ஆய்வாளர் கொலை உள்ளிட்ட கொலைகள் திமுக ஆட்சியின் மீதான விமர்சனத்திற்கு முகாந்திரமாக அமைந்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு , நவல்ப்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கொலை கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொள்ளை கும்பலை பிடிக்க விரட்டி சென்ற போது, பள்ளத்துப்பட்டி எனும் இடத்தில் வைத்து கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பம்  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு மேல் விட்ட பெரும் சவாலாகவே இருந்தது . இதனையடுத்து எஸ்.ஐ கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக, சிறுவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பதை ஏற்க முடியவில்லை எனவும் எஸ்.ஐ கொலை குறித்து சிபிஐ  விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.  இதனிடையே உயிரிழந்த எஸ்.ஐ பூமிநாதனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு , காவல் துறையினர் தங்களது பாதுகாப்பு கருதி துப்பாக்கி பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். மேலும் இறந்த எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடியும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இது ஒரு புறம் இருக்க, கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பலியான சம்பவம் மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் கனகராஜ் என்பவர்,  கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது வாகனம் நிற்காமல் வேகமாக, அவர் மீது மோதி விட்டு தப்பி சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 50 லட்சம் வழங்கியது. 

காவல்துறை மேல் அரகேற்றபடும் தொடர் கொலைகள், சாதாரண மக்களிடையே பாதுகாப்பில்லாத ஒரு வித அச்ச உணர்வையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் சென்னை அருகே நேற்றிரவு நடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே ரோந்து போலீசார் பணியில் இருந்தபோது , அவ்வழியே சந்தேகிக்கும் படி இளைஞர் கும்பல் ஒன்று சென்றுள்ளது. சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது  ஒருவரின் பேண்ட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி நீளமுள்ள வெட்டு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளேடு, மாத்திரை, ஊசி போன்றவையும் கைப்பற்றப்பட்டது. இளைஞரின் பேண்ட்டில் இருந்து வெட்டு கத்தியை போலீஸ் எடுக்கும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"

click me!