காஞ்சிபுரத்தை கதிகலங்க வைக்கும் பயங்கரம்.... தாதா போட்டியால் ரவுடி ஸ்ரீதரின் தம்பி படுகொலை..!

By vinoth kumarFirst Published Oct 9, 2019, 12:18 PM IST
Highlights

தாதா போட்டியின் காரணமாக காஞ்சிபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரின் தம்பி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தாதா போட்டியின் காரணமாக காஞ்சிபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரின் தம்பி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனின் 2-வது தம்பி கருணா (எ) கருணாகரன் (32). காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை பைனான்ஸ் அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. அங்கு, கருணாகரன் இருந்துள்ளார். மாலை 6 மணியளவில் 5 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் பைனான்ஸ் அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்தனர். 

பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த கருணாகரன், அங்கிருந்த விக்கி (எ) விக்னேஷ் ஆகியோரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.  விக்கி படுகாயமடைந்தார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருணாகரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த விக்னேஷ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதில், கொலை செய்யப்பட்ட கருணாகரன் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த ஸ்ரீதரின் சித்தப்பா மகன் ஆவார். வெங்கடேசன் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 12-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட தினேஷ் என்பவருக்கு ஆதரவாக சந்திரசேகரன் என்பவர் தேர்தலில் வேலை பார்த்துள்ளார். இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ரவுடி தினேஷ் மீது, வையாவூர் சாலையில் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றபோது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் இருந்தபோது அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொல்லி நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2017-ல் ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரம் சில மாதங்கள் அமைதியாக இருந்தது. ஆனால், ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் போல கோலோச்ச வேண்டும் என அவரின் ஆதரவாளர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதற்கிடையே, கருணாகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

click me!