
தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் ரகசியமாக 2வதாக திருமணம் செய்து கொண்ட மருத்துவரை நடுரோட்டிற்கு இழுத்து போட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பானுபிரகாஷ்(40). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கம்மம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது ரூ.9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
2வது திருமணம்
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பானுபிரகாஷிற்கும், அவரது மனைவி சத்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவியை விவாகரத்து செய்ய மருத்துவர் பானுபிரகாஷ் முடிவு செய்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மருத்துவர் பானுபிரகாஷ், கடந்த சில ஆண்டுகளாக சூர்யாபேட்டையில் வசிக்கும் வேறு ஒரு இளம்பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு அவருடன் ரகசியமாக குடும்பம் நடத்தியுள்ளார்.
நடுரோட்டில் சரமாரி தாக்குதல்
இந்த விவகாரம் முதல் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த அவர், உறவினர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் பானுபிரகாஷ் வசிக்கும் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த பானுபிரகாஷ் மற்றும் அவரது 2வது மனைவி ஆகியோரை நடுரோட்டிற்கு இழுத்து வந்து சரமாரி தாக்கியுள்ளார். இதையடுத்து இருவரையும் சத்தியா காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.