மனைவிக்கு இன்னொரு புருசனை தேடிய முதல் கணவன்…. இதுதான் காரணமாம்…!

By manimegalai aFirst Published Oct 19, 2021, 5:52 PM IST
Highlights

மூன்றரை ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் ஓம்குமார், விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மூன்றரை ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் ஓம்குமார், விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓம்குமார். இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உளுந்தை கிராமத்தை சேர்ந்த ஜான்சி என்பவரை கடந்த 2016-ல் திருமணம் செய்துகொண்டார். சாப்ட்வேர் இன்ஜினியரான ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கவே கணவன், மனைவி இருவரும் அங்கே சென்று வாழ்ந்து வந்தனர். இதனிடையே இருவருக்கும் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

பெண் குழந்தைக்கு நான்கரை வயதாகும் நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ஓம்குமார் மனைவியை பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார். கணவன் – மனைவி பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், பூந்தமல்லியில் உள்ள சப் கோர்ட்டில் விவாகரத்து கேட்டும் ஓம்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விவாகரத்து கிடைப்பதில் கால தாமதமானதால் ஓம்குமார் எடுத்த விபரீத முடிவுதான் அவரை சிக்கவைத்துள்ளது. ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் தமது மனைவியின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த தகவல்களை பதிவேற்றிய ஓம்குமார், தொடர்பு எண்ணாக ஜான்சியின் தந்தையின் செல்போன் எண்ணை பதிவேற்றியிருக்கிறார். ஆன்லைன் விளம்பரத்தை பார்த்துவிட்டு பலரும் ஜான்சியை பெண் கேட்டு அவரது தந்தையான பத்மநாபனுக்கு தொடர்ச்சியாக போன் செய்தனர்.

தாம் விளம்பரமே கொடுக்கவில்லை என்று கூறிய பத்மநாபன், ஒரு கட்டத்தில் எண்ணிக்கையில்லா போன் கால்களை எடுக்க முடியாமல் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய திருவள்ளூர் சைபர் கிரைம் போலீஸார், விவாகரத்து கிடைக்காத விரக்தியில் ஓம்குமார் தான் இதனை செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஓம்குமாரை கைது செய்த போலீஸார் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் ஓம்குமார் திருவள்ளூர் மாவட்ட பாஜக ஊடக பிரிவு செயலாளராக இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

click me!