கூலித் தொழிலாளியின் கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து, அந்த ரத்தம் எப்படி கர்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரின் காதல் மனைவிக்கு, ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது அவர் 2-ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ரத்த சோகை இருந்ததால் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தலின் படி கடந்த 3-ஆம் தேதி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
வீட்டுக்கு வந்த கர்ப்பிணியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எச்ஐவி வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது ரத்தத்தை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அங்கும் அவர்கள் எச்ஐவி வைரஸ் இருப்பதை உறுதி செய்தனர். எச்ஐவி வைரஸ் பாதிப்பு உள்ள ரத்தத்தை சோதிக்காமலேயே சாத்தூர் மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணிக்கு ஏற்றி விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்த சாத்தூர் இளைஞர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் ரத்ததானம் செய்துள்ளார். பின்னர் அவர், வெளிநாடு செல்வதற்காக மதுரைக்கு வந்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே தனது ரத்தத்தை உறவினர் பெண்ணுக்கு செலுத்த வேண்டாம் என்று அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர் கொடுத்த எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு செலுத்தவில்லை என்று தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த ரத்தம் யாருக்கு ஏற்றப்பட்டது என்பதை விசாரிக்கும் போது அது சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டது தெரியவந்தது. ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை பரிசோதிக்காமலேயே ஒரு கர்ப்பிணிக்கு செலுத்தியது எவ்வளவு அலட்சியம்?