கொரோனாவால் உயிரிழந்த கணவனின் துக்கத்தை தாங்கமுடியாமல், திருப்பூரில் தாய் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பெயர் ராதா. இவர்களுக்கு நிரஞ்சன் என்ற 22 வயது மகன் இருக்கிறார். நாகராஜ் குடும்பத்துடன் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த விவேகானந்தர் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நாகராஜ் கொரோனா தொற்றால் இறந்து விட்டார். இதனால் ராதா, தனது மகனுடன் வசித்து வந்தார். அவர் முதலிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் கணக்காளராகவும், நிரஞ்சன் கோவையில் உள்ள கணினி நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தனர்.
undefined
கொரோனா பரவல் காரணமாக நிரஞ்சன் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடைய நெருங்கிய நண்பரான திருப்பூரை சேர்ந்த மாதவ் என்பவர் தினமும் வீட்டிற்கு சென்று நிரஞ்சனை சந்தித்து பேசிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாதவ், நிரஞ்சனின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். பலமுறை அழைத்தும் நிரஞ்சன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாதவ், அவருடைய தாயாரான ராதாவிற்கு அழைத்துள்ளார்.
ஆனால் அவரும் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து மாதவ் வழக்கம் போல் நிரஞ்சன் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நிரஞ்சனின் மோட்டார்சைக்கிளும் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து மாதவ் கதவை தட்டி, நிரஞ்சன், நிரஞ்சன் என்று கூப்பிட்டார்.திறக்கவில்லை, எனவே பின்னர் வீட்டு ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவ் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் ராதாவும், நிரஞ்சனும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதையடுத்து இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் சோதனை நடத்தியபோது, நிரஞ்சனின் உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், மன்னிக்கவும், அப்பா இல்லாத உலகத்தில் வாழ பிடிக்கவில்லை என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் நிரஞ்சன் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனவே நாகராஜ் இறந்த துக்கத்தில் அவருடைய பிரிவை தாங்க முடியாமல் ராதாவும், நிரஞ்சனும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
தற்கொலை செய்வதற்கு முன்பு நிரஞ்சன் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்திருப்பதால், அவர்தான் முதலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிரஞ்சனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க வைத்தது. இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.