தூத்துக்குடியில் மீண்டும் அதிர்ச்சி.. விசாரணை என்ற பெயரில் பெண்ணை துன்புறுத்தல்.. மூன்று போலீசார் சஸ்பெண்ட்..

By Thanalakshmi VFirst Published May 18, 2022, 5:00 PM IST
Highlights

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக மூன்று பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யாமல், மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் இருந்ததால் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக மூன்று பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யாமல், மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் இருந்ததால் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம்‌ அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவர் வீட்டில் கடந்த 4 ஆம் தேதி, 10 பவுன் நகை காணாமல் போயுள்ளது. இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் வீட்டின் உரிமையாளர் தனது மனுவில், அண்டை வீட்டில் குடியிருக்கும் சண்முகத்தின் மனைவி சுமதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதையடுத்து புகார் குறித்து விசாரிப்பதற்காக, கடந்த 7-ம்‌ தேதி பெண்‌ காவலார்கள்‌ மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும்‌ சுமதியை முத்தையாபுரம்‌ காவல்‌ நிலையத்திற்கு அழைத்துச்‌ சென்றுள்ளனர்‌.  அங்கு வைத்து சுமதியை, மூன்று பெண் காவலர்களும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமதி, சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி சுமதி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரிடம், பெண்‌ காவலர்கள்‌ தன்னை துன்புறுத்தியதாக மனு அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டதன் பேரில், நடத்தப்பட்ட விசாரணையில்‌, புகார்‌ குறித்து வழக்குப்பதிவு செய்யாமல்‌ மேல்‌ அதிகாரிகளுக்கு தகவல்‌ தெரிவிக்காமல்‌ பெண்ணை காவல்‌ நிலையத்தில்‌ வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெண்‌ காவலர்கள்‌ மூவரையும்‌ தற்காலிக பணியிடை நீக்கம்‌ செய்தும்‌, மேல்‌ அதிகாரிகளுக்கு தகவல்‌ தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர்‌ முருகன்‌ என்பவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்‌ செய்து மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ பாலாஜி சரவணன்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

மேலும் படிக்க: கோவாவில் காதலியுடன் உல்லாசம்.. சடலமாக கிடந்த காதலி.. கூகுள் பே மூலம் சிக்கிய காதலன் !

click me!