ரூ.2000 மதிப்பிலான எல்இடி பல்ப் ரூ.9,000க்கு வாங்கிய அரசு அதிகாரி! ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு

By Ajmal KhanFirst Published Jun 16, 2022, 11:15 AM IST
Highlights

தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி பல்ப் வாங்கியதில் 1 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெண் உதவி இயக்குனர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 எல்.இ.டி பல்ப் வாங்கியதில் முறைகேடு

 தமிழகத்தில் போடாத சாலைக்கு போட்டதாக கணக்கு காட்டுவது, அடிக்காத பெயிண்டிக்கு அடித்தாக பில் கொடுப்பது, கட்டாத கட்டிடத்திற்கு கட்டியதாக கணக்கு காட்டி பணம் பெற்றது போன்ற புகார்களை கேள்வி பட்டிருப்போம் ஆனால் தேனி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி பல்ப்பிற்கு 9 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி, தென்கரை, வீரபாண்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளுக்கு எல்இடி பல்புகள் பொருத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 2020 ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 36 வாட்ஸ்  திறன் கொண்ட ஒரு எல் இ டி பல்ப் 9,987 ரூபாய்க்கு வாங்குவதற்க்கு பேரூராட்சி நிர்வாகங்கள் ஒப்புதல் வழங்கியது. இதன் படி 1300 எல்.இ.டி பல்ப்புகள் ஒரு கோடியே 30 லட்சத்திற்கு தேனியில் உள்ள எலக்ட்ரானிக் கடைகளில் கொள்முதல் செய்யப்பட்டது.

ரூ.2000 மதிப்புள்ள பல்ப் ரூ 9000

இந்தநிலையில் எல்.இ.டி பல்ப் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை எல்.இ.டி பல்ப்பின் விலை தொடர்பாக பல்வேறு கடைகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியது. இதன் படி பல்ப்பின் விலை 1500 ரூபாய் முதல் 2500 வரை மட்டுமே இருக்கும் என கண்டறிந்துள்ளது. ஆனால் பேரூராட்சிகள் முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் அரசை ஏமாற்றி ஒவ்வொரு பல்ப்பிற்கும் கூடுதலாக 7 ஆயிரத்து 450 ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தன்படி சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டது. கடந்த 2019/20 ஆம் ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக தேனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் 11 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!