24 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கிக்காக நகைக் கடை ஊழியர்கள் செய்த காரியம் !! பரபரப்பு வாக்குமூலம் !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2019, 7:17 AM IST
Highlights

சென்னை வண்ணாரப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் நான்கரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ். வீட்டின் அருகே நகை கடை வைத்துள்ளார். சந்தோஷ், தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டதாக கொருக்குப்பேட்டை போலீசில் 7-ந் தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சந்தோஷ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

மேலும் சந்தோஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளைபோனதால் அவருடைய வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் . சந்தோஷிடம் வேலை பார்த்து வந்ததும், டிசம்பர் மாதம் அவரை வேலையில் இருந்து நிறுத்தியதும் தெரியவந்தது.

அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா பகுதியில் சென்று கொண்டு இருப்பது தெரிந்தது. பின்னர் ஹன்ஸ்ராஜின் புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்த போலீசார், தென்மத்திய ரெயில்வே போலீஸ் கமாண்டர் ஜி.வி.குமாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஆந்திர போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்துக்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது அந்த ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு தப்பிச்செல்ல முயன்ற ஹன்ஸ்ராஜ், அவருடைய தம்பி ஹரேந்திரசிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4½ கோடி மதிப்பிலான நகை, வெள்ளி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார், விஜயவாடா சென்று கைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்தனர்.

நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தது ஏன்? என கைதான ஹன்ஸ்ராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நான், 3½ ஆண்டுகளாக சந்தோஷ் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்தேன். அவர் 3 மாதத்துக்கு ஒரு முறை சம்பளத்தை மொத்தமாக கொடுப்பார். நான், மாதந்தோறும் சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷிடம் எனது சம்பள பாக்கியை கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். இதனால் நான், பெங்களூரு சென்று அங்கிருந்த எனது தம்பி ஹரேந்திரசிங்குடன் சேர்ந்து சந்தோசை பழிவாங்க திட்டம் தீட்டினேன். அதன்படி 6-ந்தேதி எனது தம்பியுடன் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தேன். அன்று இரவு எனது தம்பியுடன் சந்தோஷ் வீட்டுக்கு சென்றேன்.

ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால் சந்தோஷ் வீட்டின் சாவியை வைக்கும் இடத்தில் இருந்து எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றோம். பின்னர் அங்கு இருந்த 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றோம்.

பின்னர் கோயம்பேட்டில் இருந்து வாடகை காரில் விழுப்புரம் சென்று, அங்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி உத்தரபிரதேசம் தப்பிச் செல்ல முயன்றோம் என தெரிவித்தார்..
 

click me!