Girl suspect death:பள்ளி மாணவிகளின் கொடூர மரணங்கள்.. தொடரும் உயிரிழப்புகள்.. அதிர்ச்சியில் பெற்றோர்கள்..

By Thanalakshmi VFirst Published Dec 16, 2021, 5:18 PM IST
Highlights

கோவையில் முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்குமுட்டையில் அழுகிய நிலையில், காணாமல் போன 15 வயது சிறுமியின் சடலம்  கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே 10 வயது சிறுமி உடல் எரிந்த நிலையில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து கோவையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

கோவை சரவணம்பட்டி அடுத்த யமுனா நகர் பகுதியில் முட்புதரில் சாக்குமூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த முட்புதரில் கிடந்த ஒரு கட்டப்பட்ட சாக்குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. சாக்கை அவிழ்த்து திறந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியல் துறையின் உதவியோடு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், அது 15 வயது சிறுமியின் உடல் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் கடந்த 11ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிசெய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள முட்புதரிலேயே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதே போன்று கொடைக்கானலில் அரசு பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் 11 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பாச்சலூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி, கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். பின் நெடுநேரமாகியும் அவர் திரும்பி வகுப்பறை வரவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்னர் சிறுமியின் பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் பள்ளி முழுவதும் காணாமல் போன சிறுமியை தேடினர். இதனிடையே பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் புதர் மண்டி கிடந்த பகுதியில் சிறுமியின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியின் சடலத்தை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மாணவி உயிரிழந்து விட்டதாகவும் சொல்லபடுகிறது.

மேலும் சிறுமி கண்டெக்கப்பட்ட இடத்தில் பெட்ரோல் கேன், தீப்பெட்டி கிடந்ததாகவும் மாணவி அணிந்திருந்த காலணி புதர் பகுதிக்குள் கிடந்ததாகவும் பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் சிறுமியை மீட்கப்பட்ட போது, அவரது வாயில் துணியை வைத்து அடைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனிடையே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களாக எனும் கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!