டிக்டாக் வீடியோ மூலம் காதல்... காதலனை தேடி திருநெல்வேலியிலிருந்து தர்மபுரிக்கு ஓடி வந்த இளம் பெண்!!

By sathish kFirst Published Mar 15, 2019, 12:14 PM IST
Highlights

டிக்டாக் ஆப் வீடியோ மூலம் காதல் மலர்ந்ததால் இளம்பெண் காதலன் வீட்டுக்கு ஓடி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

டிக்டாக் ஆப் வீடியோ மூலம் காதல் மலர்ந்ததால் இளம்பெண் காதலன் வீட்டுக்கு ஓடி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் செல்போனில் "டிக்டாக்" வீடியோ பதிவு செய்து, அதை முகநூலில் ஷேர் செய்து வந்துள்ளனர். இதை திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த பிளஸ்-1 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்த 17 வயது இளம்பெண் பார்த்துள்ளார். மேலும், இவர்கள் 2 பேரும் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், கடந்த  சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாய் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தனது தர்மபுரி வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தர்மபுரி மாவட்டம் கடமடை கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர். அப்போது காதலன் வீட்டிற்கு இளம்பெண் ஓடி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் தர்மபுரி மாவட்ட  சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க பாலக்கோடு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த விஷயம் தெரிந்த அந்த வாலிபர் திடீரென தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து போலீசார், இளம்பெண் மற்றும் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணின் பெற்றோர், வாலிபர் தனது மகளை காரில் கடத்தி வந்ததாகவும், மகளுக்கு 18 வயது  ஆகாததால் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த இளம் பெண் தான் காதலித்ததாகவும், தான் காதலனுடன் செல்வதாகவும், தன்னை காதலன் கடத்தி வரவில்லை, தானாக வந்ததாகவும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார், அந்த வாலிபரின் பெற்றோரிடம் இளம்பெண் திருமண வயதை அடையவில்லை என, அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தனர். போலீசாரின் அறிவுரையை தொடர்ந்து அந்த பெண் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து பாலக்கோடு போலீசார் இளம்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

click me!