10 வருஷத்திலே 70 ஆயிரம் ஆப்ரேஷன் …. நீட் ஆள் மாறாட்டத்தில் சிக்கிய போலி டாக்டர் !! கிறுகிறுத்துப் போயிருக்கும் மருத்துவ உலகம் !!

By Selvanayagam PFirst Published Oct 2, 2019, 10:24 PM IST
Highlights

நீட் ஆள் மாறாட்டத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள மாணவர் இர்பானின் தந்தை முகமது சஃபி ஒரு போலி டாக்டர் என்பதும் , இவர்  வேலூர் மற்றும் வாணியம்பாடியில் கிளினிக் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் முகமது சஃபி கடந்த 10 ஆண்டுகளில் 70 ஆயிரம் ஆப்ரேஷன் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம், போர்ஜரி செய்து நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்துள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய நிலையில் அவரும் அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகினர்.

இதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பிரவீண், ராகுல், இர்பான் ஆகிய மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அது போல் அபிராமி என்ற மாணவியும் ஆள்மாறாட்டம் செய்ததாக அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இர்பான் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் அவரது தந்தை முகமது சஃபியை இரு தினங்களுக்கு முன்னர் வாணியம்பாடியில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து மாணவர் இர்பானும் நேற்று சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு சரணடைந்தார்

இந்த ஆள்மாறாட்டத்துக்கு முகமது சஃபி மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முகமது சஃபி, டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதும் படிப்பை நிறைவு செய்யாமல் வேலூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் கிளீனிக்குகள் வைத்துள்ளதும்  தெரியவந்தது.

இதனால் முகமது சஃபியின்  கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் அவர் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் முகமது சஃபி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்ரேஷன்கள் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் போலி டாக்டர்கள் குறித்து சோதனை நடத்தி ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டார்கள். இந்த சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது. இத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் முகமது சஃபி 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!