இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது... பொன் மாணிக்கவேல் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2019, 12:30 PM IST
Highlights

சிலை முறைகேட்டு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார். 

சிலை முறைகேட்டு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ் கந்தர் உற்சவர் சிலை பழுதடைந்ததால், புதிய உற்சவர் சிலையை செய்யக் கடந்த 2015 கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்து அறநிலையத்துறையின் உத்தரவின் பேரில், 50 கிலோ எடையில் சோமாஸ் கந்தர் சிலையும், 65 கிலோவில் ஏலவார்குழலி அம்மன் சிலையும் செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிய சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டு 2016 டிசம்பரில் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.

50 கிலோ சிலைக்கு 5 விழுக்காடு அதாவது 2.5 கிலோ தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்றும், 65 கிலோ எடையில் செய்யப்பட்ட ஏலவார் குழலி சிலைக்கு 3.25 கிலோ தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவில் தெரிவித்து இருந்தது. இந்து அறநிலையத்துறை கணக்குப்படி இரு சிலைகளிலும் சேர்த்து மொத்தம் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும்.

ஆனால், சோமாஸ் கந்தர் சிலை 5 சதவிகிதம் தங்கம் கலந்து செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக  தங்கத்திலும் முறைகேடுகள் பல நடந்திருப்பதாகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரது மகன்கள் தினேஷ், பாபு ஆகியோர் கோவில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், விசாரணை நடத்தி வந்தார். அதன் அடிப்படையில், தமிழக அரசின் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோவில் அர்ச்சகர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் காஞ்சி ஏகாம்பரர் கோயில் சோமாஸ் கந்தர் சிலை முறைகேட்டு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே சோமாஸ் கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

click me!