2000 கோடி ரூபாய் வசூலித்து ஏப்பம்விட்ட நிதி நிறுவன அதிபர் ! காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 400 கோடி லஞ்சம் !! பதற்றத்தில் வாடிக்கையாளர்கள் !!

By Selvanayagam PFirst Published Jun 11, 2019, 7:27 PM IST
Highlights

பெங்களூருவில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த 2000 கோடி ரூபாயுடன் நகைக்கடை மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதுடன்  காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரிடம் 400 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடையில் சொந்தமாக தங்க நகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 

இதுதவிர மன்சூர்கான் நடத்தி வரும்  நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது மகளின் திருமணத்திற்கு தங்க நகைகள் வாங்கி கொள்ளலாம் என நினைத்து பணம் முதலீடு செய்திருந்தனர். குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகஅளவில் முதலீடு செய்திருந்ததாக தெரிகிறது. 

கடந்த 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகைக்கும் மன்சூர்கானின் நகைக்கடை திறக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, கடந்த 4 நாட்கள் கடை திறக்கப்படவில்லை. நேற்று காலையிலும் கடை திறக்காமல் பூட்டியே கிடந்தது.

இதற்கிடையில், நகைக்கடை உரிமையாளர் மன்சூர்கான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ததில் ரூ.400 கோடி சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க்கிடம் கொடுத்திருந்தேன். 

தற்போது அந்த பணத்தை அவர் கொடுக்க மறுக்கிறார். ரூ.400 கோடியை திரும்ப கொடுக்கும்படி கேட்டால், ரவுடிகள் மூலம் மிரட்டல் விடுக்கிறார். எனக்கும், குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுபோல, அரசு அதிகாரிகள் சிலருக்கும் பணம் கொடுத்துள்ளேன்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறேன், என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருந்தது. 

அந்த ஆடியோவை மன்சூர்கான் போலீசார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியதும், அது தான் தற்போது வெளியாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆடியோ வெளியான பின்பு வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு உரிமையாளர் மன்சூர்கான் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. 

இதையடுத்து, சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை முன்பு, அங்கு முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் கடையை திறக்கும்படியும், மன்சூர்கான் உடனடியாக கடைக்கு வர வேண்டும் என்றும், தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கோரியும் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கூறிய தகவல்படி மன்சூர்கான் தனது கடையில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்திருந்த பணம் ரூ.2000 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. 

அதே நேரத்தில் முதலில் புகார் அளிக்காமல் இருந்த வாடிக்கையாளர்கள் கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தொடங்கினார்கள். அதுபோல, மன்சூர்கான் நகைக்கடை முன்பு திரண்டு இருந்தவர்களிடம் இருந்தும் புகார்கள் பெறப்பட்டன.

இதற்கிடையில், மன்சூர்கானின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் மறுத்துள்ளார். மன்சூர்கானிடம் இருந்து ரூ.400 கோடி வாங்கவில்லை என்றும், இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணம் ரூ.2000 கோடியுடன் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!