
ஒரு தலைக்காதலால் நடுரோட்டில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகிலுள்ள அமர்தலுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா. பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். ரம்யாவுக்கு குண்டூர் அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்த சசி கிருஷ்ணா (24) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார். இருவரும் தினமும் செல்போனில் பேசி பழகி வந்தனர்.காலபோக்கில் அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் ரம்யா அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ரம்யா அருகில் உள்ள ஓட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த சசி கிருஷ்ணா, ரம்யாவிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் பைக்கில் வெளியே சென்று வரலாம் என சசிகுமார் அழைத்தார். அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. பலமுறை அழைத்தும் ரம்யா பைக்கில் ஏற மறுத்ததால் அந்த வாலிபர் கடும் ஆத்திரமடைந்தார். அப்போது, அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை நடுரோட்டில் வைத்து சரமாரியாக குத்தி விட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதி உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், ரம்யாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சசி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ரம்யா குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.