போலீஸ் உடையில் போலீஸ் நிலையத்துக்கே சென்று மிரட்டிய போலி போலீஸ் !! துணை நடிகை அதிரடி !!

By Selvanayagam PFirst Published Nov 1, 2019, 9:34 AM IST
Highlights

சிதம்பரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூல் செய்தது மட்டும்மல்லாமல் போலீஸ் நிலையத்தக்கே சென்று மிரட்டிய  துணை நடிகையை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த 3 தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சூரியப்ரியா. இவர் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள தனது 3 தோழிகளுடன் போலீஸ் வேடம் அணிந்து பணம் பறிக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து சூரியப்ரியா சப்-இன்ஸ் பெக்டர் வேடம் அணிந்து சிதம்பரம் உள்பட பல இடங்களில் பணம் வசூல் செய்தார்.

இந்நிலையில் சிதம்பரம் நகரப் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமலும், குடி போதையிலும் வாகனம் இயக்கி வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சக்கரபாணி என்பவர் வந்துள்ளார். அவரது வாகனத்தை மறித்து விசாரித்ததில் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து டவுன் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் இருந்தவாறு சக்கரபாணி தனது நண்பர் செந்திலைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கு செந்தில், தனது மாமா மகள் எஸ்.ஐ தான் என்றும் அவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் எஸ்.ஐ சூரியபிரியாவை அழைத்துக்கொண்டு செந்தில் டவுன் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.

காவல் நிலையத்தில் எஸ்.ஐ பாஸ்கர் இருந்துள்ளார். அப்போது, சென்னையில் எஸ்.ஐ-யாக பணிபுரிவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சூரியபிரியா, சக்கரபாணியின் வாகனத்தை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டரிடம் அனுமதி கேட்கிறேன் என்று, இனஸ்பெக்டரிடம் எஸ்.ஐ பாஸ்கர் தகவல் தெரிவித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் விசாரித்தபோது, உளறிக் கொட்டியுள்ளார்  சூரியபிரியா.

மேலும்  சீருடையிலிருந்த ஸ்டாரைச் சரியாக அணியாமல் இருந்ததாலும், உயரம் சற்று குறைவாக இருந்ததாலும் சந்தேகமடைந்து, சூரியபிரியாவிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் போலி போலீஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!