வங்கிகணக்கில் பணம் திருடப்பட்டால் கவலைபடாதீங்க.. உடனே இந்த எண்ணுக்கு கூப்பிடுங்க.. உங்கள் பணம் safe..

By Ezhilarasan BabuFirst Published Jul 19, 2021, 9:24 AM IST
Highlights

மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இணைய சேவைகளை குறிவைத்து கோடிக்கணக்கில் சமூக விரோத கும்பல்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.

சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் புகார் அளிக்கும் வகையில் புதிய இணையதள முகவரியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய இணையதள Cybercrime.gov.in என்ற முகவரியை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இணைய சேவைகளை குறிவைத்து கோடிக்கணக்கில் சமூக விரோத கும்பல்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.

வங்கி தொடர்பாக சேவைகளில் இந்த குற்றமானது பெருமளவில் நடைபெற்று வருகிறது. வங்கி கணக்கு எண்ணை கேட்பது, ஒ.டி.பி  எண்ணை கேட்பது உள்ளிட்ட பல வழிகளில் இணையதள குற்றவாளிகளால் நாள்தோறும் கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் சைபர்கிரைம் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது என்றாலும் அதில் புகார் அளித்து, புகாரை பெற்று, நடவடிக்கை எடுப்பதற்குள் இணையதள குற்றவாளிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை திருடி விடுகின்றனர்.நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடிய வகையில் செயல்படும் இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய இணையதள முகவரியை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 

இதன் மூலம் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் காவல்துறைகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பயிற்சி முறையில் சோதிக்கப்பட்ட வந்த இந்த இணையதளம் தற்போது முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் பாதிக்கப்பட்ட நபர் எந்த மாநிலத்தில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் உடனேயே இந்த இணையதளத்தில் புகார் அளித்தால் அவர் இருக்கும் இடத்தில் உள்ள காவல் துறைக்கு உடனடியாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு அதற்கென தனியான தேசிய கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி சேவை எண்ணும் (155260) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் திருடப்பட்ட அடுத்த நிமிடமே இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணமானது முடக்கப்படும். 

மேலும் அனைத்து மாநில காவல்துறைகளும் இந்த இணையதளத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதால் புகார் எங்கு வந்தாலும் உடனடியாக அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாவட்டங்களாக இருந்தால் டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி என்ற வழியில் உடனடியாக தகவல் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்யும் முறை இதில் உள்ளது. அதே போன்று தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம்,  திருச்சி உள்ளிட்ட 6 காவல் ஆணையரகமாக இருந்தால் உடனடியாக அந்த காவல் ஆணையருக்கு இந்த தகவல் கொண்டுசெல்லப்பட்டு அதன் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையவழியில் எந்த வகை குற்றமாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சைபர் கிரைம் ஏடிஜிபியாக வெங்கட்ராமன்  இருக்கிறார் அவரின் கீழ் தான் இந்த இணையதளம் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். 

மேலும் சைபர் குற்றங்களில் ஒரே வகையான செல்போன் எண்கள் மூலம் அருகில் உள்ள மாநிலங்களில் அல்லது பிற மாநிலங்களில் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக இந்த தகவல் அனைத்து மாநிலங்களுக்கும் பகிரப்படும் அதன்மூலம் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காணமுடிகிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக முழுவீச்சில் இந்த இணையதளம் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டு அந்த புகார்கள் சென்னை காவல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

click me!