
சென்னை பூக்கடை பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைத்துக்கொண்டிருந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பிரமுகர் கொலை
சென்னை, தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (59). இவர், பூக்கடை பேருந்து நிலையத்தில் ஜூஸ் மற்றும் பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்கள் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். ஒரு மகள் பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் பூக்கடை பகுதி அதிமுக வட்ட செயலாளராக இருந்த சவுந்தரராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன், திமுகவில் இணைந்தார். இந்நிலையில், நேற்று காலை பூக்கடை பேருந்து நிலையத்தில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற இருந்தது. இதற்கான பணியில், சவுந்தரராஜன் மற்றும் திமுகவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென சவுந்தரராஜனை வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரை விடாமல் அங்கும் கும்பல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது.
போலீஸ் விசாரணை
இதில் தலை, கழுத்து, கை, கால்கள் உள்பட 11 இடங்களில் வெட்டு விழுந்ததில் சவுந்தரராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவுந்தரராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
முன்விரோதம்
அதில், கொலையான சவுந்தரராஜனுக்கும் அதிமுக பிரமுகர்கள் காட்டான் கணேசன், வீரபத்திரன் ஆகியோருக்கும் கட்சி சுவர் விளம்பரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இருதரப்பினரும் எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, இருதரப்பினரிடையே சமாதானம் பேசி அனுப்பி வைத்தது தெரியவந்தது. எனவே, இந்த முன்விரோத தகராறில் சவுந்தரராஜன் வெட்டிக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.