
சென்னை மடிப்பாக்கம் பெரியார்நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(35) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் விரைவில் கொலையாளிகளை கைது செய்த பிறகு கூலிப்படையை ஏவியது யார் என்று தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பெரியார்நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் 188வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தார். சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பாக அவரது மனைவி போட்டியிட மனு செய்துள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வத்துக்கு சால்வை அணிவிப்பது போல் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தேர்தல் சம்பந்தமாக செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தின்போது செல்வத்துடன் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் சந்தேகப்படும் ரவுடிகளின் பட்டியலை வைத்தும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் சென்னை செம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவருக்கும் செல்வத்துக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக, செல்வத்தால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அதிமுக பிரமுகர் போலீசில் புகார் செய்திருந்தார்.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் செல்வத்திற்கும், அவரது நெருங்கிய நண்பருக்கும் மோதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கொலையில் ஈடுபட்டர்கள் சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கைது செய்த பிறகு கொலை செய்த ஏவியர்கள் விவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.