
செங்கல்பட்டில் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவரை 10ம் வகுப்பு மாணவிகள் இருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடுமேடு பகுதியில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் இடத்தில் கடந்த 18ம் தேதி மனித பல், ரத்தகறை இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்திய போது அங்கு ஆண் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இளைஞர் யாரேனும் காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி காவல் நிலையத்தில் இளைஞர் பிரேம் குமார் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து, கொலை செய்யப்பட்டது பிரேம் குமார் என்பது தெரியவந்தது. மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிரேம்குமார் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். காணாமல் போன அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரேம் குமார் தனது பகுதியை சேர்ந்த இரண்டு 10-ம் வகுப்பு மாணவிகளுடன் பழகி வந்துள்ளார். அப்போது அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை காட்டி இரண்டு மாணவிகளிடமும் அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார். இது போன்று தொடர்ச்சியாக மாணவிகளிடம் ரூ.2½ லட்சம் வரை மாணவர் பிரேம் குமார் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பிரேம்குமார் கேட்ட போதெல்லாம் பயந்துபோய் மாணவிகள் இருவரும் பணத்தை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி வேறு வழியின்றி இந்த பணத்தை எடுத்து வந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பிரேம் குமாரின் தொல்லை தாங்கமுடியவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் தங்களுடன் பழகி வந்த நண்பர் அசோக்கிடம் தெரிவித்துள்ளனர். அப்போது மாணவர் பிரேம்குமாரின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்யலாம்? என கேட்டுள்ளனர்.
அப்போது நண்பர் அசோக் நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இதன்பிறகு தான் பிரேம்குமார் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அசோக் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 வாலிபர்கள் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் மாணவிகள் இருவரின் நண்பர்கள் ஆவர். கொலைக்கு இவர்கள் நேரடியாக உதவி செய்தார்களா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர் பிரேம் குமார் கொலை தொடர்பாக பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.