பேஸ்புக்கில் புகைப்படங்களை பகிரும் பெண்களே உஷார்… சினிமா ஆசைகாட்டி மாடலிங்க் பெண்ணை தொந்தரவு செய்தவர் கைது!

By manimegalai aFirst Published Dec 27, 2021, 9:48 AM IST
Highlights

சினிமா ஆசையில் தமது வலையில் சிக்கும் பெண்களிடம் கவர்ச்சியான படங்களை வாங்கும் ரஞ்சித், பின்னர் அந்த படங்களை வைத்தே இளம்பெண்களுக்கு தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா ஆசையில் தமது வலையில் சிக்கும் பெண்களிடம் கவர்ச்சியான படங்களை வாங்கும் ரஞ்சித், பின்னர் அந்த படங்களை வைத்தே இளம்பெண்களுக்கு தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்களின் நிறுவனங்களில் ஏறி, இறங்கி சினிமா வாய்ப்பு தேடிய காலங்கள் மாறி இன்றைய காலக் கட்டங்களில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலமாகும் பெண்களை தேடியும் சினிமா வாய்ப்புகள் செல்கின்றன. இதனால் சினிமா ஆசை கொண்ட பெண்கள் பலரும் விதவிதமாக செல்ஃபி எடுத்தும், சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறனர். திறமையை வெளிப்படுத்த சமூக வலைதளங்கள் வாய்பாக அமைந்தாலும், அதனால் ஆபத்தும் நிறைந்தே இருக்கின்றன. சமூக வலைதளம் மூலம் பழகிய கோவை பெண்ணிடம், அவருக்கு சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர், அந்த பெண்ணை நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண்ணை சீரழித்த இளைஞரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சென்னையில் முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரை சேர்ந்த ஒருவர், அந்துள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தமது 21 வயது மகளுக்கு சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி செல்போனில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய கொளத்தூர் போலீஸார், செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் மோசடி இளைஞரை கண்காணித்து வந்த போலீஸார், நேற்றைய தினம் பெரும்பாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.

கைதானவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அவர்  திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது, அவர் தனது நண்பர்களுடன் பெரும்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. மாடலிங் மற்றும் சினிமா துறையில் வாய்ப்பு தேடும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் ரஞ்சித் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றும் பெண்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். சம்மந்தப்பட்ட பெண்களை முதலில் தொடர்பு கொள்ளும் போது பெண் குரலில் பேசி சினிமா வாய்ப்பு இருப்பதாக கூறும் ரஞ்சித் பின்னர், அவர்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படியும் கூறிவந்துள்ளார். சினிமா ஆசையில் புகைப்படங்களை அனுப்பும் பெண்களை அதைவைத்தே மிரட்டில் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

கொளத்தூரை சேர்ந்த மாடலிங் பெண் ஒருவரும் ரஞ்சித்தின் வலையில் சிக்கி தமது புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்ட ரஞ்சித், ஹோட்டலுக்கு செல்லலாம், வெளியே செல்லலாம் என்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். ரஞ்சித் மோசடி நபர் என்பதை அறிந்துகொண்ட அப்பெண் தமது பெற்றோரிடம் விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து மாடலிங் பெண்ணின் தந்தை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடி இளைஞர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்த கொளத்து போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரஞ்சித்திடம் ஏமாந்த பெண்கள் குறித்து தகவல்களை சேகரிக்க அவர் பயன்படுத்திய செல்போனை போலீஸார் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

click me!