
செங்கல்பட்டில் இரட்டை கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (எ) அப்பு (32), பிரபல ரவுடி. இவர் மீது முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் திமுகவை சேர்ந்த ரவிபிரகாஷ் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த கும்பல் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி கார்த்திக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
பின்னர் அதே கும்பல் பிரபல ரவுடி மகேஷ் (22) வீட்டுக்கு சென்று டிவி பார்த்துக் கொண்டிருந்த அவரை துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. அடுத்தடுத்து பிரபல ரவுடிகள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, இரட்டை கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பிஸ்கெட் (எ) மொய்தீன், தீன் (எ) தினேஷ், மாது (எ) மாதவன் ஆகியோருக்கும், கொலை செய்யப்பட்ட கார்த்திக், மகேஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், மாமண்டூர் பாலாறு அருகே பதுங்கியிருந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 4 பேரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடி குண்டு வீசியதால் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதைனயடுத்து, அவரது உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க என்கவுன்டர் வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.