
சாதியை தூண்டும் வகையில் பேசிய ஆசிரியையிடம் எல்லாரும் சமம் தானே டீச்சர் என மாணவன் பதிலடி கொடுத்துள்ள ஆடியோ வைரலாகி சமூக வலைதள்த்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் சாதி வெறி தூண்டும் வன்மத்துடன் பேசிய ஆசிரியை மாவட்ட கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
சமூக வலைதளத்தில் ஒரு பள்ளி ஆசிரியையும் மாணவனும் பேசிக் கொள்வது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த ஆசிரியை பேசியுள்ள தகவல் இப்படியா பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பது என கேட்கும் அளவிற்கு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குளத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியை கலைச்செல்வி சாதிரீதியாக மாணவர்களிடம் பேசிய ஆடியோ தான் அது.
அதாவது, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்கு சென்றுவிடக்கூடாது என சாதிய வன்மத்துடன் ஆசிரியை கலைச்செல்வி பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பு சென்றுவிடக்கூடாது, பிறகு அவர்கள் நம்மை வேறு மாதிரி நடத்துவார்கள், அதில் நம்ம சாதிதான் பொறுப்பில் இருக்கணும், நாம் ஒன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை அவர்களிடம் போய் நிற்க என அந்த ஆசிரியை அந்த மாணவனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் எல்லோரும் சமம் தானே டீச்சர் என தெரிவித்துள்ள பதில்தான் இதில் ஹைலைட், அந்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சாதி வெறி பிடித்த ஆசிரியைக்கு மாணவன் சரியான சவுக்கடி கொடுத்துள்ளான் என பலரும் அந்த மாணவனை பாராட்டி வருகின்றனர். ஆசிரியை கலைச்செல்வி அந்த பள்ளியில் பள்ளி மாணவரிடம் தனது சாதியை கூறி நான் நாடார்.. நீ தேவமார்.. ஆனால் இந்தப் பள்ளிக்கூடத்தின் நிர்வாகம் SC இடம் போகப்போகிறது, இதை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே உங்கள் ஊரிலிருந்து பெரியவர்களை அழைத்து வா.. பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் நாம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என அவர் பேசியிருக்கிறார். அந்த உரையாடல் பின்வருமாறு:-
ஆசிரியை கலைச்செல்வி: நீ புளியங்குளம் தானே நீ...... சாதியா..? நான் ஒன்னு சொல்றேன் எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?
மாணவன்: பண்றேன் டீச்சர்...
ஆசிரியை: உனக்கு பால்ராஜ் சார் நம்ம பீட்டி சார் எல்லாம் பிடிக்குமா?
மாணவர்: பிடிக்கும் டீச்சர்..
ஆசிரியை: பிடிக்குமா அப்படியா.? என்னை எல்லாம் பிடிக்காதா.?
மாணவன்: எல்லாரையும் பிடிக்கும் டீச்சர்..
ஆசிரியை: நான் சொன்னதை நீ செய்வியான்னு தெரியலையே.. நான் சொன்ன யாரையுமே எனக்கு பிடிக்காது, உனக்கு பிடிக்குதே.!
மாணவன்: எல்லாரையும் பிடிக்கும் டீச்சர்..
ஆசிரியை: நான் சொல்றதை நீ செய்வீயான்னு தெரியலையே..? உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாது, எனக்கு தான் அவர்கள் யாரையும் பிடிக்காது, நான் உன் கிட்ட பேசினதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது..
மாணவன்: சரிங்க டீச்சர் நீங்கள்தான் எதையுமே சொல்லலயே, சொல்லுங்க
ஆசிரியை: நான் ஏ எச் எம் தானே.? பள்ளியில் புளியங்குளம் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று அந்த ஆசிரியர்கள் கூறுகிறார்கள், அட்மிஷன் வரும்போது புளியங்குளம் பிள்ளைகளுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது என்று சொல்றாங்க, அதனாலதான் ஏன் புளியங்குளம் புள்ளைங்க மீது இவங்களுக்கு என்ன கோபம் என்று தெரிந்துகொள்ளதான் கேட்டேன்.
மாணவன்: நான் புளியங்குளம் தான், எனக்கு எல்லாம் செல்வகுமார் சார் தான் அட்மிஷன் போட்டாரு.. பிரச்சனை இல்ல டீச்சர், நான் கேள்விப்பட்ட வரைக்கும் எல்லாரும் நல்ல சார் தான்,
ஆசிரியை: புளியங்குளம் பற்றி தான் அவர்கள் பேசுவார்கள் அதுவும் சாதியைப் பற்றி தான் பேசுவாங்க நம்ம பிள்ளைகள் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடக்கப்போகுது, உங்க ஊரில் இருந்து வந்து கலந்துகொள்ள சொல்லுடா, ஒரு சார்பான கும்பல் கையில் பள்ளிற்கூடம் போகக் கூடாது, அதுவும் அவங்க சாதிக்கிட்ட போகக் கூடாது, நாம ஒன்னும் தாழ்த்தப்பட்டவங்க கிடையாது நாம அவங்க கிட்ட போய் நிக்க. என்று அந்த ஆசிரியை அந்த மாணவனிடம் கூற அதற்கு அந்த மாணவர் எல்லாமே சமம் தானே டீச்சர் என பதில் கூறியுள்ளார்.
ஆசிரியை: அப்படி சொல்றியா.? நீ நல்ல பையன் மாதிரி பேசுறியே, அவங்க இருந்தா, புளியங்குளம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காதே என்ன பண்ண போற.?
மாணவன்: அப்படி சொல்றீங்களா டீச்சர்,
ஆசிரியை: ஆமாம்.. உங்க ஊர் ஆட்களை கூட்டி வந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் சேர்த்து விடு, முதலில் உன் நம்பரை எனக்கு கொடு, இந்த என் நம்பரை எடுத்துக்கோ, என அந்த மாணவரிடம் அந்த ஆசிரியை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் பிஞ்சு நெஞ்சங்கள் மத்தியில் நஞ்சை ஊற்றும் வகையில் சாதி வெறியுடன் ஆசிரியை கலைச்செல்வி பேசியுள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி மீனா ஆகிய ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு ஆசிரியைகளையும் சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.