Breaking News: தலித் மக்களை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுன் கைது.. கேரளாவில் வைத்து தூக்கியது போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 14, 2021, 3:00 PM IST
Highlights

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசி வீடியோ வெளியிட்டு வந்த வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் இருந்த அவரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசி வீடியோ வெளியிட்டு வந்த வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலின சமுதாய மக்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட  பல அமைப்புகளால் கொடுத்துள்ள புகாரை அடுத்து அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் அவர் நேற்று முன்தினம் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். 

அதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை கைது செய்ய  வேண்டும் என்று கூக்குரல் எழுகிறது ஆனால் அது இன்னும் நடந்தபாடில்லை, உங்களால் முடிந்தால் என்னை கைது செய்து கொள்ளுங்கள், ஆனால் இந்த தமிழ் பெண்ணின் வளர்ச்சியை யாராலும், ஒருபோதும் தடுக்க முடியாது, நான் ஒரு சாதனையாளர் என காவல் துறையை வெறுப்பேற்றும் வகையில் அவர் பேசியிருந்தார்.

மேலும், நான் பேசிய ஒரு சாதாரண, சிறிய விஷயத்துக்காக என்னை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் கூக்குரல் எழுகிறது. தமிழ் திரையுலகில் நடக்கிற அசிங்கங்களை தான் நான் கூறிவருகிறேன். இந்த தமிழ் திரையுலகை தூய்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான் பேசுகிறேன், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை குறிவைத்து தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் எனக்கு எதிராக பரப்பப்பட்டு வருகிறது. ஏனென்றால் நான் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராகவும், சாதனையாளர் ஆகவும் இருந்து வருவதுதான் அதற்கு காரணம். என்னை வீழ்த்த தொடர்ந்து சதி நடக்கிறது, நான் பேசியதற்காக என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பலர் மீது கொடுத்த புகார்களின் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே அதுபற்றி பேசுவார்களா.? என ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்கிறீர்கள் ஆனால் கைதுசெய்தபாடில்லை என கூறிய அவர் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள், என்னை அசைத்துகூட பார்க்க முடியாது என ஆணவமாக பேசி இருந்தார். இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் ஒரு ஒட்டலில் அவர் தங்கி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அதில் ஆஜராகாமல் அவர் தவிர்த்து தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ள அவரை அம்மாநில காவல்துறையிடம் ட்ராண்சிட் வாரண்ட் பெற்று, போலீசால் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். 

 

click me!