
திருமணமான ஒரே ஆண்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவியை சரமாரியாக குத்திவிட்டு கணவன் தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவியும், கள்ளக் காதலனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் போலீசார் கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
செல்போன் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் வளர வளர அதற்கு இணையான குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வரும் அதே நேரத்தில் பெண்களை குறிவைத்து ஏமாற்றுவது, பெண்கள் தவறான பாதைக்கு செல்வது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திருமணமான ஒரே ஆண்டில் இன்ஸ்டால்வில் வெறொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி கொலை முயற்சி வரை சென்றுள்ள சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை அயனாவரம் வசந்தாகார்டன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்வேதா (19) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் (19) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் ராகேஷ் மீது திடீரென ஸ்வேதாவுக்கு சலிப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாகவே சுவேதா இன்ஸ்டாகிராமில் சத்ய கண்ணன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது. அப்போத இரவெல்லாம் கள்ளக் காதலனுடன் சாட்டிங். டாக்கிங் என்று இருந்து வந்துள்ளார் ஸ்வேதா, இந்த விஷயம் கணவன் ராகேஷுக்கு தெரிந்தது. இந்த தொடர்பை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்வேதாவை ராகேஷ் எச்சரித்தார். ஆனால் அதை ஸ்வேதா நிறுத்தவில்லை இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் சுவேதாவுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் பாடம் புகட்ட முடிவு செய்தார்.
இந்நிலையில் ஸ்வேதாவின் செல்போனிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு சத்திய கண்ணனுக்கு மெசேஜ் அனுப்பினார் ராகேஷ், அவரது நண்பர் மற்றும் மனைவி ஸ்வேதாவுடன் ராகேஷ் அங்கு சென்றார். அப்போது ஸ்வேதாவின் கள்ளகாதலன் சத்ய கண்ணன் அங்கு வந்தார். தனது மனைவியுடன் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராகேஷ் அவரிடம் கூறினார். அதற்கு சத்ய கண்ணன் மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஸ்வேதாவும் சத்ய கண்ணனுக்கு ஆதரவாகவே பேசினார், இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் முதுகில் சரமாரியாக குத்தினார். இதனைத் தடுக்க சத்ய கண்ணன் பாய்ந்தார், அப்போது அவருக்கும் கழுத்தில் குத்து விழுந்தது.
இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதனால் அங்கிருந்து ராகேஷ் மற்றும் அவரது நண்பர் தப்பி ஓடினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மனைவியையும் கள்ளக் காதலனையும் குத்திவிட்டு தப்பிய கணவன் ராகேஷ் மீது கோயம்பேடு போலீசார் கொலை முயற்சி, பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.