
2005 ஆம் ஆண்டு பெண் மீது ஆசிட் ஊற்றிய குற்றவாளியை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒரு பெண்ணை அவரது வீட்டில் வைத்து கற்பழித்த குற்றத்திற்காக 43 வயதான நபரை டெல்லி வெளி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தனது உறவினர் ஒருவர் தன்னை மிரட்டி கற்பழித்ததாக தெரிவித்து இருக்கிறார். குற்றவாளியாகி இருக்கும் உறவினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையின் மீது ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டி உள்ளார். இதோடு முழு சம்பவத்தையும் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார்.
முன்னதாக 2005 ஆம் ஆண்டு வாக்கில் இதே நபர் கான்பூரில் பெண் ஒருவர் மீது ஆசிட் ஊற்றிய குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறைவாசம் முடித்து வெளியே வந்த இந்த நபர் அதே பெண்ணை மீண்டும் கண்டுபிடித்து டெல்லியில் கற்பழித்து இருக்கிறார்.
புகார்:
“பெண்ணை கற்பழித்த நபர் தலைமறைவாகி விட்டார். கற்பழித்த நபர் விடுத்த மிரட்டலில் அஞ்சிய பெண், சம்பவம் நடந்து முடிந்து மூன்று மாதங்கள் கழித்து மார்ச் மாத வாக்கில் புகார் அளித்தார். பின் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளியின் மீது மார்ச் 21 ஆம் தேதி கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது,” என துணை ஆணையர் சமீர் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
குற்றவாளியை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. காவல் துறை தனிப்படை டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் குற்றவாளி மறைந்திருக்கும் இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர். பின் கான்பூர் சுற்று வட்டார பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவனின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அதிரடி கைது:
எலெக்டிரானிக் கண்கானிப்பு மூலம் குற்றவாளியை போலீசார் பெங்களூருவில் கண்டறிந்தனர். பின் மூன்று பேர் அடங்கிய குழு பெங்களூரு விரைந்து சென்று குற்றவாளியை மடக்கிப் பிடித்து கைது செய்தது. பின் கைது செய்த குற்றவாளியை போலீசார் பெங்களூருவில் இருந்து டெல்லி கொண்டு வந்துள்ளனர்.
ஆசிட் தாக்குதலுக்கு முன் வேறு ஏதேனும் குற்ற செயல்களில் இவன் ஈடுபட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.