சென்னை அண்ணாநகர் பங்களா வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாநகரில் கொள்ளை
சென்னை அண்ணா நகர் V பிளாக் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுசித்ரா. இவரது மகன் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக மூதாட்டியின் உதவிக்காக வேலைக்காரி மகாலட்சுமி உடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த 2 பேர்கொண்ட மர்ம கும்பல், மூதாட்டி மற்றும் வேலைக்காரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளது.
பணம் மற்றும் நகையை தரவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்த 1.15 லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐ போன் 14Pro செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையடித்து யார்.?
கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு எண் 100 க்கு தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கோபால் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ள நிலையில், மூதாட்டிக்கு உதவியாக இருந்த வேலைக்காரி மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்