அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு.. 38 பேருக்கு மரண தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை..கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!

By vinoth kumarFirst Published Feb 18, 2022, 12:22 PM IST
Highlights

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 51 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர்.

கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனையும்,  11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 51 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 4 பேருக்கு எதிராக இதுவரை வழக்கு விசாரணை தொடங்கவில்லை. அவர்களை தவிர 77 பேருக்கு எதிராக அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அகமாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் இருந்து 28 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 49 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 38 பேருக்கு மரண தண்டனையும்,  11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

click me!