
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சிறையில் உள்ள படப்பை குணாவை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகி இருந்த குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. படப்பை குணாவின் கூட்டாளிகள் அவருக்கு உதவி செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் படப்பை குணா அடைக்கப்பட்டார். இந்நிலையில் படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொது அமைதியையும் பொது ஒழுங்கையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, குணாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த கடிதம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.