வேறொருவருடன் தொடர்பு.. மனைவியை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கணவன் கைது!

By Kevin KaarkiFirst Published May 1, 2022, 12:04 PM IST
Highlights

மனைவியை அவர்களது வீட்டின் வெளியே இருக்கும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கொண்டு அவரை தாக்க தொடங்கினர். 

பீகார் மாநிலத்தில் பெண் ஒருவரை குடும்பத்தார் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

பீகார் மாநிலத்தின் ரோடாஸ் மாவட்டத்தில் வசிப்பவர் தீபக் ராம். திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தீபக் ராம் தனது மனைவி  வேறொரு நபருடன் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி வந்தார். மேலும் இந்த விவகாரத்தை காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றார். காவல் நிலையத்தில் உள்ள அலுவலர் தம்பதிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். 

கொடூர தாக்குதல்:

காவல் நிலையத்தில் இருந்து சிங்பூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியதை அடுத்து, தீபக் ராம் அவரது தந்தை சிவ்புஜான் ராம் மற்றும் குடும்பத்தார் சேர்ந்து கொண்டு தீபக் ராமின் மனைவியை அவர்களது வீட்டின் வெளியே இருக்கும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கொண்டு அவரை தாக்க தொடங்கினர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து ரோடாஸ் காவல் நிலையத்தின் எஸ்.ஐ. அசிஷ் பாரதி மற்றும் சில போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர், மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டு வந்த பெண்ணை காப்பாற்றி முதலில் தாக்குதலை நிறுத்தினர். பின் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். 

மின்கம்பத்தில் கட்டி கொடூர தாக்குதல் நடத்தியதாக அந்த பெண்ணின் கணவர், மாமனார் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது. 

வழக்குப் பதிவு:

"தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அங்கு பெண்ணை மின்கம்பத்தில் கட்டி ஐந்து பேர் கடுமையாக தாக்கினர். முதலில் பெண்ணை தாக்கியவர்களை தடுத்து நிறுத்தி, கட்டிவைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டோம். இதை அடுத்து கொடூர தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு  செய்து இருக்கிறோம். இந்த சம்பவம் பற்றி தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது," என அசிஷ் பாரதி தெரிவித்தார்.

click me!