சென்னையில் போதைப்பொருள் சப்ளை.. பறிமுதல் செய்யப்பட்ட 1,200 மாத்திரை, 100 ஊசி மருத்து.. விசாரணையில் பகீர்..

By Thanalakshmi VFirst Published May 1, 2022, 10:51 AM IST
Highlights

சட்டவிரோதமாக போதைக்காக பயன்படுத்த பைக்கில் எடுத்து செல்லப்பட்ட 12,000 உடல் வலி நிவாரண மாத்திரைகளையும் 100 ஊசி மருந்து குப்பிகளையும்  போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதனை சப்ளை செய்வதற்காக எடுத்து சென்ற நபரையும் கைது செய்தனர்.
 

சென்னை ஆர்.கே நகரில் சட்டவிரோதமாக போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்து செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 

ஏற்கனவே கஞ்சா, போதைப்பொருள்கள், சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்தும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரகசிய தகவல் அடிப்படையில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.  

இதனையடுத்து அவரிடம் சோதனை செய்ததில், அந்த பைக்கில் உடல் வலி நிவாரண மாத்திரைகளும், 10 மிலி அளவுள்ள ஊசி மருந்து குப்பிகளும் இருந்ததை கண்டு, போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அதன்படி, பைக்கை ஓட்டி வந்த நபர் திருநின்றவூரைச் சேர்ந்த வடிவுநாதன் என்பது தெரியவந்தது. மேலும் வடிவுநாதன், உடல் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவோர்களுக்கு சட்டவிரோதமாக சப்ளை செய்து வந்ததாக கூறியுள்ளார். அவரிடமிருந்து 12,000 உடல் வலி நிவாரண மாத்திரைகள், 100 ஊசி மருந்து குப்பிகள், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு வடிவுநாதனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!