
இருந்த இடத்தில் இருந்தே கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி வந்தார் ஏ கேட்டகிரி ரவுடிகளாக மதுரை பாலா மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சத்தீஷ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அதை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்ற குற்றங்கள் கைதேர்ந்த ரவுடி கும்பல்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரவுடிகளை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் ரவுடிகளின் குற்றப்பின்னணி மற்றும் அவர்களது history sheet போலீசார் பராமரித்து வருகின்றனர். அந்தவகையில் ரவுடிகளை தரம்பிரித்து ஏ,பி, சி என தரம் பிரித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் 10க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் பாலா ஏ கேட்டகிரி ரவுடியாக போலீசார் அடையாளப்படுத்தியுள்ளனர். இருந்த இடத்திலிருந்து ஸ்கெட்ச் போட்டு கூலிப் படைகளை ஏவி கொலை செய்வது பாலாவின் வாடிக்கை. பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் உட்பட பலரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டது பாலா தான் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு கொலைக்கும் ஸ்கெட்ச் போட்டு நீதிமன்றத்தில் சரண் அடைவதை வாடிக்கையாக வைத்திருந்தான் பாலா, இந்நிலையில்தான் நீண்ட மாதங்களாக நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென பாலா தலைமறைவாகினான், பாலாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அப்போது பாலா தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சத்தீஷ்கர் மாநில விரைந்த ரவுடிகள் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசார், அங்கு ராய்ப்பூரில் முகாமிட்டனர். அங்கு தலைமறைவாக இருந்த மதுரை ரவுடி பாலா மற்றும் அவனது கூட்டாளிகள் ரவுடி சிவா மற்றும் மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
"
பின்னர் அங்கு அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி ட்ரான்சிட் வாரன்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் ரவுடி பாலா பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழக போலீஸ் தங்களை நிம்மதியாக வாழவிடாமல் தொல்லை கொடுத்து வருகிறது என்றும், தங்களது கை கால்கள் உடைக்கப்பட்டால் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு காவல்துறை தான் பொறுப்பு என்றும் பாலா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.