
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் ரவுடிகள் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாசாரம் தற்போது பெரிய அளவில் பரவி உள்ளது. ரவுடிகள் மட்டும் அல்லாமல், அப்பாவி இளைஞர்கள்கூட இந்த கலாசாரத்தை பின்பற்றி போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இந்த பட்டாகத்தி கேக் கலாசாரத்தை சென்னையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ரவுடி பினுதான்.
அவர் சமீபகாலமாக தன் மீதான வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். ஆனால் அவ்வப்போது சூளைமேடு பகுதிக்கு வந்து மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் இவர் மீது அப்போது புகார்கள் வந்தன. இதனால் இவரது நடமாட்டத்தை கண்காணித்து, கைது செய்யும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். பின்னர் அவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தியாகராயர் நகர் ஜி.என்.செட்டி சாலையில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போனை கொண்டு வந்த டெலிவரி ஊழியரிடம், மிரட்டி செல்போனை பறித்து தாக்கிவிட்டு துரத்தி அடித்த வழக்கில் பினுவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பினு, தனது வழக்கறிஞர் மூலம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தான். இதனையடுத்து ரவுடி பினுவை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ரவுடி பினு தான் இதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு முறையிட்டான். அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணி அளவில் ரவுடி பினுவை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.