
அரசு அதிகாரிக்கு அரிவாள் வெட்டு
தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சித்தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதில் மாவட்ட திட்ட அலுவலகத்தின் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அலுவலகத்தில்,திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி இன்று பணியில் இருந்த போது, இதே அலுவலகத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய போடியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜராஜேஸ்வரியை சரமாரியாக தலை மற்றும் கையில் வெட்டினார். இதனால் ராஜராஜேஸ்வரி உயிர் தப்புவதற்காக அரிவாள் வெட்டுடன் அருகில் இருந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் முத்துமணியின் அறைக்கு ஓடி காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை
அரிவாளுடன் உமாசங்கர், ராஜேஸ்வரியை துரத்திக்கொண்டு வந்துள்ளார். இதைப்பார்த்த முத்துமணி செய்வது அறியாமல் கத்தியுள்ளார். முத்து மணியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வளாகத்தில் இருந்த அனைவரும் ஓடி வந்து ராஜராஜேஸ்வரியை வெட்டிய உமாசங்கரை பிடித்து, அவரிடமிருந்து அறிவாளைப் பறித்துள்ளனர். இதனையடுத்து தான் ராஜேஸ்வரியும், முத்துமணியும் நிம்மதி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த அரசு வாகனத்தில் ராஜராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உமா சங்கரை கைது செய்த காவல்துறையினர் தேனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் விரோதத்தால் அரிவாள் வெட்டு
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உமாசங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி ராஜராஜேஸ்வரி, அவரை பலமுறை பணியிட மாற்றம் மற்றும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் பணியாற்றி வரும் உமாசங்கர், மீண்டும் தேனி மாவட்டத்திற்கு மாறுதல் பெற பல முறை முயற்சித்த போதும் அதற்கு ராஜராஜேஸ்வரி தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே ஆத்திரம் அடைந்த உமாசங்கர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து தேனிக்கு வந்துள்ளார். அப்போது ராஜராஜேஸ்வரியை உமாசங்கர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் இடது மணிக்கட்டில் சரமாரியாக வெட்டு விழுந்ததால் மணிக்கட்டுக்கு கீழே உள்ள பகுதி துண்டானது. இதனையடுத்து மதுரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முத்துமணி அழைத்து செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அரசு பெருந்திட்ட வளாகத்தில் பெண் அலுவலர் அவரது அலுவலகத்திலேயே சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.