
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தந்தையை ஆகியோரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60) வயதான இவரது மகன் சிவகுமார் (20). இவர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள பைபர் படகு பழுது பார்க்கும் பட்டறையில் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் சிவகுமார் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் பகுதியை சேர்ந்த 20-வயதான தனது உறவுக்காரப் பெண்ணை தனது அக்கா மகளுக்கு பிறந்தநாள் என கூறி, மணவாளக்குறிச்சியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை சிவகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார் சிவகுமார். ஆனால் அதற்கு பின் சிவகுமார் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
மேட்ரிமோனியல் தளத்தில் பெண்ணுடன் சாட்டிங்.. 91 லட்சத்தை சுருட்டி எஸ்கேப் ஆன லேடி - உஷார் மக்களே !!
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், தன்னை சிவகுமார் அவரது அக்கா குழந்தைக்கு பிறந்தநாள் என அழைத்து சென்று தன்னை ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மாணவியை, மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், புகாரின் பேரில் சிவகுமார் மீது பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது, திருமண செய்வதாக கூறி நம்பிக்கை மோசடி செய்தது, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழும், இதற்கு உடந்தையாக அவரது தந்தை பால்ராஜ் மீதும் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.